பிளாஷ்பேக்: 4 மொழிகளில் வெற்றி பெற்ற சிறு பட்ஜெட் படம்
நல்ல கதையம்சமுள்ள சிறுபட்ஜெட் படங்கள் எப்போதும் வெற்றி பெற்று விடும். இந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றி பெற்ற படங்களில் சிறுபட்ஜெட் படங்கள்தான் அதிகம். இது இப்போதல்ல 1960களிலும் இந்த நிலைதான் இருந்துள்ளது.
பிரபலமான தெலுங்கு நடிகர் ஏ.சுப்பாராவ், புராண கதைகளும், மாயாஜால கதைகளும் ஆதிக்கம் செலுத்தி வந்த தெலுங்கு சினிமாவில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி வெற்றி கண்டவர். தமிழில் எங்கள் வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை, பாட்டாளியின் வெற்றி, எங்கள் குலதேவி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். அதில் முக்கியமான படம் 'குமுதம்'.
இந்த படத்திற்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைக்கதை எழுதியிருந்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் சௌகார் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன், 9வது தேசியத் திரைப்பட விருதுகளில் 'சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழையும் பெற்றது.
தமிழில் பெரிய வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கில் 'மஞ்சி மனசுலு' (1962) என்றும், மலையாளத்தில் 'சுசீலா' (1963) என்றும், இந்தியில் 'பூஜா கே பூல்' (1964) என்றும் ரீமேக் செய்யப்பட்டது. 3 மொழிகளிலுமே வெற்றி பெற்றது.
ஒருவருக்காக ஒருவர் காதலை தியாகம் செய்யும் கதைதான் இது. அண்ணன் பாதுகாப்பில் வளரும் தம்பி எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னையில் வேலை பார்க்கும்போது அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அண்ணன் பேச்சை தட்ட முடியாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்கிறார். இறுதியில் யார் யாரோடு இணைந்தார்கள் என்பதுதான் கதை. ரொம்ப சிம்பிளான கதை. சிறிய பட்ஜெட்டில் தயாராகி பெரிய வெற்றி பெற்றது.
கே.வி.மகாதேவன் இசையில் உருவான 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்', 'என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?', 'மியாவ் மியாவ் பூனைகுட்டி', 'கல்யாணம் ஆனவரே சவுக்யமா?', 'காயமே இது பொய்யடா', உள்ளிட்ட காலத்தால் அழியாத பாடல்கள் இடம்பெற்ற படம்.