விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதலில் எங்க லிஸ்டிலேயே இல்லை : வெங்கி அட்லூரி
கருப்பு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி தான் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார். மிமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். 40 வயது நபர் ஒருவருக்கும் 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையேயான உறவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது வரும். ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தாங்கள் முதலில் திட்டமிட்டது இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் அல்ல என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வெங்கி அட்லூரி கூறியுள்ளார்.
“முதலில் சூர்யாவிடம் ஒரு வரலாற்றுப் படம் அதாவது ஒருவரது சுயசரிதை கதையைத் தான் கூறினேன். ஆனால் அந்த கதைக்கான காப்புரிமை சார்ந்த சில சிக்கல்கள் காரணமாக அந்த பயோபிக் கதையைத் தொடர முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தான் ஏற்கனவே இரண்டு பயோபிக் படங்களில் நடித்திருந்ததால் கொஞ்சம் கலகலப்பாக படம் செய்யலாமே என்று சூர்யா விரும்பினார். அதன் பிறகுதான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதையை உருவாக்கினேன். கதையைக் கேட்ட முதல் முறையே சூர்யா இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.