கோல்கட்டாவின் ஆரம்பமான மணிரத்னம் படம்
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'தக் லைப்'. எதிர்பாராத விதமாக இப்படம் படுதோல்வியை சந்தித்து அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதன்பின் கடந்த ஒரு வருட காலமாக தனது அடுத்த பட கதை விவாதத்தில் இருந்தார் மணிரத்னம். இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன. சிலர் நடிக்க மறுத்ததாகவும் கூட சொன்னார்கள்.
கடைசியில் அப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள் என்பது உறுதியானது. படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் கோல்கட்டாவில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
முழுமையாக ஷேவ் செய்யப்பட்ட முகத் தோற்றத்தில் விஜய் சேதுபதியை கோல்கட்டா விமான நிலையத்தில் சிலர் எடுத்த வீடியோ வெளியானது. அந்த தோற்றத்துடன் விஜய் சேதுபதியை படமெடுப்பதை அவருடன் வந்தவர்கள் தடுத்ததும் அதில் பதிவாகியுள்ளது.
படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.