பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி மறைவு
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கும் நேற்றே கல்லஹள்ளி என்ற இடத்தில் நடைபெற்றது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7வது வயதில் 'தியாகய்யா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'நாயகன்' படத்தில் இடம் பெற்ற 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலைப் பாடியவர். இன்றைய தலைமுறைக்கு இந்தப் பாடலைப் பற்றிச் சொன்னால்தான் தெரியும்.
குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரர் ஜமுனா. தமிழில் 1952ல் வெளிவந்த 'கல்யாணி' என்ற படத்தின் மூலம் முதன் முதலில் பாடினார்.
“காளை வயசு கட்டான சைசு..., செந்தமிழ் தேன் மொழியாள்..., பாட்டொன்று கேட்டேன்..., காட்டில் மரம்..., சின்னச் சின்ன சிட்டு..., காவேரி தாயே..., உங்க மனசு ஒரு தினுசு..., தாரா தாரா வந்தாரா..., எந்த நாளும் சந்தோஷமே..., யாரடி நீ மோகினி..., குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே..., மாமா மாமா..., ஆசையும் என் நேசமும்...,” என அந்தக் காலத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர்.
சமீபத்தில் தான் பழம்பெரும் பாடகி ஜானகி காலமானார். அவர் இறந்த இரண்டு வாரங்களுக்குள் ஜமுனா ராணி மறைவு தென்னிந்திய திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.