என்ஜிகே Vs ராமாயணா : சாய் பல்லவி Vs ரகுல் ப்ரீத் சிங்
செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் 2019ல் வெளிவந்த படம் 'என்ஜிகே'. அப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி கணவன், மனைவியாக நடித்திருப்பார்கள். கார்ப்பரேட் பி.ஆர். ஆக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், சூர்யா மீது ஆசைப்படுவார். சாய் பல்லவி, ரகுல் இருவருக்கும் இந்த விஷயத்தில் சண்டை நடக்கும்.
அந்தப் படத்தில் மனைவியாக சாய் பல்லவி, அவரது கணவர் மீது ஆசைப்படுபவராக ரகுல் நடித்திருப்பார்கள். அது அப்படியே 'ராமாயணா' படத்திலும் தொடர்கிறது என நேற்று இப்படத்தின் டிரைலர் வந்ததிலிருந்து ரசிகர்கள் கொஞ்சம் டிரோல் செய்து வருகிறார்கள்.
ராமாயணத்தில் ராமர் மனைவி சீதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி. அவரது கணவரான ராமர் மீது ஆசைப்படும் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
காட்டில் ராமரைக் கண்டு அவர் மீது காமம் கொண்டு அணுகியவர் சூர்ப்பனகை. ராமர் மறுத்ததால் சீதையைத் தாக்க முயன்ற போது, இலட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டித் துரத்தினார்.
என்ஜிகே படத்தில் நடித்த கதாபாத்திரங்களின்படி ராமாயணா படத்திலும் சாய் பல்லவி, ரகுல் நடிப்பது ஆச்சரிய பொருத்தம்.
'ராமாயணா' கதையைத்தான் கொஞ்சம் உல்டா செய்து கொஞ்சமாக 'என்ஜிகே' கதையை உருவாக்கினாரோ செல்வராகவன் ?.