உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா தீவிர ரசிகர் தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்தநாள்

இளையராஜா தீவிர ரசிகர் தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்தநாள்


ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் அவர் முதல் படம் ‛பத்ரி', தெலுங்கில் அவர் முதல் படம் ‛தேவி'. இப்போது ‛எல்லம்மா' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சென்னை சாலிகிராமத்தில்தான் அவரின் புகழ் பெற்ற பிருந்தாவன் ஸ்டூடியோ உள்ளது.

இவர் பல ஜானரில் பாடல்கள் கொடுத்து இருந்தாலும் குத்து பாடல், துள்ளல் பாடல்களில் சிறப்பானவராக கருதப்படுகிறார். தமிழ், தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த இந்த வகை பாடல்கள் பல தரப்பினரை ஆட வைக்கின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழில் ஹிட்டான பாடல்கள் சில...

1) டாடி மம்மி வீட்டில் இல்லை (வில்லு)
2) ஊ சொல்றீயா மாமா (புஷ்பா)
3) என் பேரு மீனாகுமாரி (கந்தசாமி)
4) வாடி வாடி (சச்சின்)
5) காதல் வந்தாளே (சிங்கம்)
6) புல்லட்டு (தி வாரியர்)
7) கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் (குட்டி)
8) கோழி வெடக்கோழி (சம்திங் சம்திங்)
9) கிஸ்க்.. கிஸ்க்..( புஷ்பா 2)
10) சிங்கம் டான்ஸ்(சிங்கம்20

இப்படி குத்து பாடல்களில் அவர் பிரபலம் ஆனாலும், இந்த பாடல்களால் உலகம் முழுக்க கச்சேரிகள் செய்தாலும் அவர் இளையராஜாவின் தீவிர ரசிகர். பொதுவாக இளையராஜா மற்ற இசையமைப்பாளர் ஸ்டூடியோவுக்கு சென்று அந்த இசையமைப்பாளரை வாழ்த்தியது இல்லை. அது, தேவிஸ்ரீபிரசாத்துக்கு மட்டும் நடந்து இருக்கிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேவிஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இருக்கிறார். அங்கு பெரியளவில் வைக்கப்பட்டுள்ள தனது போட்டடோவை பார்த்து ரசித்து இருக்கிறார். அதேபோல், எல்லா பேட்டிகளிலும் இளையராஜா பற்றி பெருமையாக கூறுவார் தேவிஸ்ரீபிரசாத். அவருக்கு ‛புஷ்பா' படத்திற்கு விருது கிடைத்தபோது நேரில் அவரை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார். ஆனால் இன்றுவரை அவரால் இளையராஜாவை தனது இசையில் பாட வைக்க முடியவில்லை.

இளையராஜா தனது ஸ்டூடியோவுக்கு வந்தது குறித்து 'ஒரு சிறு குழந்தையாக, இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்குள் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது. நான் படிக்கும்போது கூட, எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசையுடன் வளர்ந்தேன். பிரிக்க முடியாத வகையில் நான் அவருடைய இசையுடன் இணைந்திருக்கிறேன். எப்போதும் இருப்பேன். ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற கனவை எனக்குள் விதைத்ததும் அவரது இசைதான். ஸ்டுடியோவை உருவாக்கியதும் இளையராஜாவின் போட்டோவை மாட்டினேன்.

நான் இசையமைப்பாளராக மாறி எனது சொந்த ஸ்டுடியோவை உருவாக்கியதும் அதில் இளையராஜாவின் பெரிய புகைப்படம் ஒன்றை மாட்டினேன். அந்த புகைப்படத்தின் முன் இளையராஜாவுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இளையராஜா ஐயா என்னைப் பார்க்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு. இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நமது உண்மையான ஆசைகள் மற்றும் அன்பை நிறைவேற்றக் கூடியது. அதன்படி இறுதியாக எனது இந்த கனவு நனவாகியது, குறிப்பாக எனது குருவான ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணா பிறந்த நாளில் என்னுடைய கனவு நினைவாகி உள்ளது. நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று. இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா, உங்கள் வருகைக்கு நன்றி. என்னையும் எனது குழுவிற்கும் உங்களுடைய ஆசீர்வாதத்தை வழங்கியதற்கும் நன்றி. எப்பொழுதும் எங்களை ஊக்குவித்தும் சொல்லிக்கொடுத்தப் படியும் இருந்ததற்கு நன்றி.' என கூறியிருந்தார்.

தேவிஸ்ரீபிரசாத் அப்பாவும் சினிமாகாரர்தான். சில தெலுங்கு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மறைந்த மாண்டலின் ஸ்ரீநிவாஸ் சிஷ்யர் தேவிஸ்ரீபிரசாத். அவரிடம்தான் இவர் சின்ன வயதில் பாட்டு கற்றார். இன்னும் தேவிஸ்ரீபிரசாத்துக்கு திருமணம் ஆகவில்லை. தில்ராஜூ தயாரிக்க, வேணு இயக்கும் ‛எல்லம்மா' என்ற படத்தில் அவர் கதைநாயகனாக நடித்து வருகிறார். ஆந்திராவில் உள்ள வேடுருபாகா என் சொந்த ஊர், சின்ன வயதில் சென்னை வந்துவிட்டோம். ஆனால் ஊர் தொடர்பு சொந்தங்களுக்காக அங்கே வீடு கட்டியுள்ளார். அந்த ஊர் பாசம், மக்கள், கிராமிய நம்பிக்கை, சடங்குகள் எல்லம்மா படத்தை உருவாக்கி, என்னை நடிக்க வைத்துள்ளது. எல்லம்மா என்பது கிராமிய தெய்வம் என படம் குறித்து அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !