48 மணி நேரத்தில் 'ராமாயணா' டிரைலர் செய்த சாதனை! 350 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள்!
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான ஹிந்தி ‛ராமாயணா' படத்தின் டிரைலர், வெளியான 48 மணி நேரத்திற்குள் அனைத்து அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 350 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலும் உலகளவிலும் உள்ள ரசிகர்களிடையே கிடைத்துள்ள இந்த பிரமாண்ட வரவேற்பு, ஆண்டின் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இதன் இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள், பிரபலங்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் இந்த டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் பிரமாண்ட அளவு, பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு, அதிநவீன விஎப்எக்ஸ் தொழில்நுட்பம், உணர்ச்சிப்பூர்வமான கதை நகர்வு மற்றும் வெறித்தனமான பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, படத்தின் நமது உண்மை, நமது வரலாறு என்ற வரிகள் மக்களிடையே பெரும் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த இதிகாசங்களில் ஒன்றை உண்மைத்தன்மை, மரியாதை மற்றும் பிரமாண்டமான சினிமா பார்வையுடன் வழங்க முயன்ற தயாரிப்பாளர்களின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.