உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவரவர் வாழ்வின் அனுபவங்களே அறிவுரைகள்! நடிகர், தயாரிப்பாளர் நிகில் நம்பிக்கை

அவரவர் வாழ்வின் அனுபவங்களே அறிவுரைகள்! நடிகர், தயாரிப்பாளர் நிகில் நம்பிக்கை


சமீபத்தில் வெளியான ‛திரிஷ்யம்-3, எல்.பி.டபிள்யூ.,' வெப் சீரிஸ்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நிகில் நாயர். இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளர், ஆர்க்கிடெக்ட், இசைக்கலைஞர் என பன்முகங்களை கொண்டவர்.

நான்காம் தலைமுறை சினிமா குடும்பத்தைச் சேர்ந்த இவர் தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பெரியப்பா, தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி மாமா. மேலும் இவர் புகழ்பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் கொள்ளுப் பேரன்.

இவர் கூறியதாவது: சிறு வயதில் இருந்து என்னை சுற்றி நடக்கும் சினிமா பணிகளை பார்க்கிறேன். இதனால் எனக்கு நடிப்பு மீதும், தயாரிப்பு மீதும் அளவு கடந்த காதல். இருப்பினும் பி.ஆர்க்கிடெக்ட் படித்தேன். பிறகு தான் சினிமாவுக்குள் வந்தேன்.

'சர்வம் தாளமயம்' படம் தான் என்னுடைய முதல் படம்.எடிட்டிங்கில் என்னுடைய காட்சிகள் போய்விட்டன. பின் மலையாள திரைப்படம் 'ஹ்ருதயம்', அண்ணன் பிரணவ் மோகன்லால் உடன் நடித்தேன். எனக்கு முதல் சம்பளம் கிட்டார் வாசித்ததில் தான் கிடைத்தது. திரைப்படம், இசை, கதை சொல்லும் கலையின் மீது ஆழமான புரிதலை வளர்த்துக் கொண்டேன். காட்சியை எவ்வாறு வடிவமைப்பது, இடத்தை எப்படிப் புரிந்துகொள்வது போன்ற விஷயங்களில் என்னுடைய ஆர்க்கிடெக்ட் படிப்பு எனக்கு உதவியது.

இயக்குனர்கள் ஜீத்து ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், மகிழ் திருமேனி, ஆஷிக் அபு, ராஜிவ் மேனன் இயக்கத்தில் நடித்துள்ளேன். இவை தவிர 'நிழல்', 'கிரேஸி காதல்' ஆல்பங்களிலும் நடிப்பு, தயாரிப்பு பணிகளிலும், 'ஒரு ஆயிரம் கனா' - கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளேன். விளையாட்டில் வாலிபால் மீது தனி ஈர்ப்பு உண்டு. மாணவ பருவத்திலே தமிழ்நாடு மாநில அளவிலான வாலிபால் வீரராக தேர்வானேன். மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளிலும் விளையாடி உள்ளேன்.

பிரேசிலியன் ஜியூ-ஜிட்சு, முய் தாய் ஆகிய தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றுள்ளேன். ஜி.டி., கார் பந்தயம் மீது ஆர்வம் உள்ளது. டூவீலரில் சுற்றுலா செல்வதும் எனக்கு பிடிக்கும்.

'விடாமுயற்சி' திரைப்படம் எனது தமிழ் சினிமா கனவை நிறைவேற்றியது. இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். நடிகர் அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. படப்பிடிப்பின் போது தொழில்முறை உறவைத் தாண்டி நட்பும் உருவானது. கூர்க் பயணம், துபாயில் கார் பந்தயம் உள்ளிட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. குடும்பமே வாழ்க்கையில் முக்கியம் என்பதை அஜித் எப்போதும் நினைவூட்டுவார்.

இயக்குனர் மகிழ் திருமேனி, ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக விளக்குவார். நடிகர்களுக்கு தேவையான நேரத்தை அளித்து சிறந்த நடிப்பை வெளிக்கொணர்வார்.

எல்.பி.டபிள்யூ., திரைப்படத்தில் நடித்தது மீண்டும் கல்லுாரி சென்றது போன்றது இருந்தது.

அடுத்ததாக ஹிந்தி, மலையாளத்தில் உருவாகும்படத்தில் நடித்து வருகிறேன்.இன்னொரு தமிழ் படமும் பேச்சுவார்த்தையில் உள்ளது.

எனக்கு அஜித், மோகன்லால், கொள்ளு தாத்தா கே.பாலாஜி என நிறைய இன்ஸ்பிரேஷன்கள் உள்ளனர். நான் யாருக்கும் அட்வைஸ் செய்வதில்லை. அவரவர் வாழ்வின் அனுபவங்களே அவர்களுக்கான அறிவுரைகளை தரும். அதை கவனித்தால் நம் வாழ்வை நாமே மாற்ற முடியும்,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !