உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொச்சின் ஹனிபாவின் புதிய வீட்டுக்கு மனைவியுடன் நேரில் சென்ற மம்முட்டி

கொச்சின் ஹனிபாவின் புதிய வீட்டுக்கு மனைவியுடன் நேரில் சென்ற மம்முட்டி


மலையாளத்தில் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் மற்றும், இயக்குனராக வலம் வந்த கொச்சின் ஹனிபா 2010ல் காலமானார். தமிழ் ரசிகர்களுக்கும் இவர் நன்கு அறிமுகமானவர் தான். இவரது மறைவுக்குப் பிறகு இவரது மனைவி மற்றும் இரட்டைப் பெண் குழந்தைகள் ஆகியோர் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தனர்.

சமீபத்தில்தான் கொச்சின் ஹனிபாவின் சொத்துக்களும் சேமிப்புகளும் அவரது பெண் குழந்தைகள் மேஜரான பிறகு அவர்களது கைக்கு வந்து சேர்ந்து, அதன் மூலம் கொச்சியில் உள்ள வெண்ணலாவில் புதிய வீடு கட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரகப்பிரவேசம் செய்தனர். அந்த சமயத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த மம்முட்டி, தற்போது ஓய்வு கிடைத்துள்ள நிலையில் தனது மனைவியுடன் ஹனிபாவின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்து அவர்களது குடும்பத்தை சந்தித்துள்ளார்.

மம்முட்டியுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்தான் கொச்சின் ஹனிபா. தனது சகோதரரை போல அவரை கருதினார் மம்முட்டி. கொச்சின் ஹனிபா மலையாளத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ளார். அதில் ஐந்து படங்களில் மம்மூட்டிதான் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பதை வைத்தே அவர்களது நட்பு எந்த அளவிற்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, தனது படங்களில் பெரும்பாலும் தவறாமல் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் கொச்சின் ஹனிபா இடம்பெற வேண்டும் என்பதையும் மம்முட்டி விரும்புவாராம். அந்த அளவிற்கு அவர்கள் மிகுந்த நட்புடன் இருந்தார்கள் என்கிறார்கள் இருவரது நட்பை பற்றி நன்கு தெரிந்த திரையுலகத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !