ஒரு தலைமுறையின் உத்வேகம்: சிம்ரன் - ஸ்ரீலீலா மாறி மாறி புகழாரம்
90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். இவரின் நடனத்திற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது. தற்போதும் சில படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். இதேபோல், தற்போதைய கதாநாயகிகளில் நடிகை ஸ்ரீலீலா, நடனத்தில் அசத்தி வருகிறார்.
இந்த நிலையில், சிம்ரனை நேரில் சந்தித்துள்ளார் ஸ்ரீலீலா. இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி உள்ளிட்ட படங்களைசிம்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'திறமையையும், இத்தகைய நேர்மறை ஆற்றலையும் மிக இயல்பாகக் கொண்டிருக்கும் ஒருவரைச் சந்திப்பது எப்போதுமே அற்புதமானது. தொடர்ந்து வளர்ந்து, மற்றவர்களுக்கு உத்வேகம் அளியுங்கள், ஸ்ரீலீலா' எனப் பதிவிட்டுள்ளார்.
சிம்ரனின் பதிவைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பகிர்ந்து, நீங்கள் அளவற்ற அன்பும் அரவணைப்பும் கொண்ட ஒரு அற்புதமான மனிதர் மேடம். உங்களுக்கு என் அன்புகள், என்றும், சிம்ரனை ஒரு தலைமுறையின் உத்வேகம் என்றும் வர்ணித்தார் ஸ்ரீலீலா.
சிம்ரனின் பதிவின் கீழ் அவர் மேலும் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில், நான் நீண்ட காலமாகப் போற்றி வரும் ஒருவரிடமிருந்து வரும் இந்த வாழ்த்து, எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. நன்றி, மேடம் என்று குறிப்பிட்டிருந்தார்.