உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா ஒரு நாளில் ஆறு பாட்டு… மகன் ஆறு மாதத்துக்கு ஒரு பாட்டு!

அப்பா ஒரு நாளில் ஆறு பாட்டு… மகன் ஆறு மாதத்துக்கு ஒரு பாட்டு!

'நம்ம அப்துல் ஹாலிக் பாய் துபாய் போய் செட்டில் ஆனாலும் ஆனாரு. அவரோட பாட்டுகளுக்காக காத்திருக்கிற நம்மளையெல்லாம் சுத்தமா மறந்துட்டாரு' என்று ஏங்கிக் காத்திருக்கிற யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்களுக்கு இந்த வாரம் 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ?' மொமண்டேதான்.

முதல் லட்டு விஜய்யின் வாரிசு 'சிக்மா' பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது பட புரமோஷனுக்காக அளித்து வரும் பேட்டிகளில் தனக்குப் பிடித்த இசையமைப்பாளர் என்று யுவனைப் புகழ்ந்து தள்ளிவருவதோடு, தன் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியிருப்பதையும் பெருமிதத்தோடு பகிர, அது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருவது.

அடுத்த லட்டு, சுமார் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு வெளியாகப்போகிற பத்து பாடல்கள் கொண்ட யுவனின் புதிய ஆல்பம். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட யுவன்,… ' டைரக்டர் இளனுடன் எனது மூன்றாவது படம் 'பியார் பிரேமா கல்யாணம்'. அடுத்து வெளிவரும் எனது இந்த ஆல்பத்தில் 10 பாடல்கள். அட்ராசிட்டியை ஆரம்பிக்கலாமா?' என்று அறிவித்திருக்கிறார். இந்த ஆல்பம் ஆகஸ்ட் 21 அன்று ரிலீஸாகிறது.

இப்படிப்பட்ட இசை அட்ராசிட்டிகளை யுவன் சமீபத்தில் மிகவும் குறைத்துக்கொண்டார். ஆக்சுவலாக இது அட்ராசிட்டி இல்லை லேட்ராசிட்டி. கடந்த ஐந்தாறு வருடங்களாக படங்களுக்கு இசை அமைப்பதை மிகவும் குறைத்துக்கொண்டே வருகிறார். குறிப்பாக துபாயில் குடும்பத்துடன் செட்டில் ஆனபிறகு, அவரது தரிசனம் கிடைக்காதா என்று அவரை வைத்துப் படம் பண்ண நினைக்கிற இயக்குநர்களே ஏங்கவேண்டிய நிலை என்கிறார்கள்.

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானுக்குப் பின்னர் தமிழில் 50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் களமிறங்கி அவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வெற்றிபெற்றவர்களாக இருந்தாலும் யுவனுக்கு மட்டும் ரசிகர்கள் மனதில் ஒரு விஷேசமான இடமுண்டு. அது நிச்சயம் அவர் இளையராஜாவின் வாரிசு என்பதற்கானது அல்ல. காதலர்களுக்காக போட்ட அவரது வசீகரமான மெட்டுக்கள் இளைஞர், இளைஞிகளை அவர் வசம் ஈர்த்தன. குறிப்பாக அவர், பலதரப்பட்ட பிரேக் அப்களால் காயம்பட்ட காதலர்களுக்கு இசை ஊசி போட்ட இளைய மருத்துவர் என்றே பார்க்கப்பட்டார். மூத்த மருத்துவர் யார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

1997ல் தனது 18 வது வயதில் 'அரவிந்தன்' படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் துவங்கும் யுவன் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' மூலம்தான் எனது பாட்டெல்லாம் கேட்டுப்பார் என்று கவனம் ஈர்க்கிறார். அடுத்த இரண்டாவது ஆண்டில் வெளியான பாலாவின் 'நந்தா'வில் தனி முத்திரை பதிக்கிறார். அடுத்தடுத்து வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' , 'காதல் கொண்டேன்' , 'பருத்தி வீரன்' படங்கள் அவரை இன்னொரு 'இளையராஜா' என்றே சொல்ல வைத்தன. இந்த ஹிட் பட்டியலில் யுவனுக்கு 50க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. இளைய இசையமைப்பாளர்கள் வேறு யாரிடமும் காண முடியாத யுவன் மேஜிக் அது.

அப்பாவைப் போலவே, அறிமுக இயக்குநர்கள் பலருக்கும் ஆதர்ச இசையமைப்பாளராக யுவன் இருந்துகொண்டேயிருந்தார். ஹிட் கொடுத்த பெரிய இயக்குனர்கள் பின்னால் யுவன் ஒரு நாளும் போனதில்லை. யுவன் குறித்து ஒரு மேடையில் பேசும் தனுஷ், ''துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களோட வெற்றிக்கு முழுக் காரணம் யுவன் சாரோட பாட்டுக்களும் பின்னணி இசையும்தான். அந்தப் படங்கள் வெற்றிபெறாம போயிருந்தா நாங்க நடுத்தெருவுலதான் நின்னிருப்போம்.

யுவனுக்குப் போட்டியாக ஒவ்வொரு காலத்திலும் ஒருத்தர் வருவாங்க. எதிர்ல இருக்கவங்க பெயர் மாறிக்கிட்டேயிருக்கும். ஆனா யுவன் அவரோட இடத்துல ஸ்ட்ராங்கா இருந்துக்கிட்டேயிருப்பார்'' என்கிறார்.

தனுஷின் இந்தப் பேச்சுக்கு சாட்சியாக ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன், அமீர், ராம், வெங்கட் பிரபு என்று ஒரு பட்டியலையே காட்ட முடியும். விஜய்யோடு 'புதிய கீதை', 'கோட்' என இரண்டே படங்கள் பண்ணியிருந்தாலும் 'தீனா' வழியாக 'பில்லா' , 'மங்காத்தா' என்று அஜித், யுவன் காம்போவில் 8 படங்களும் அல்டிமேட் சக்சஸ்.

செல்வராகவன், அமீர், ராம், விஷ்ணுவர்தன், ஏ.எல்.விஜய், எம்.ராஜேஷ், வெங்கட் பிரபு, வஸந்த், என்று சில இயக்குநர்கள் பெயரை உச்சரிக்கும்போதே யுவனின் பெயர், அந்த இயக்குநர்களின் பெயருக்கு மிக அருகிலேயே இருக்கும். இந்த யுவனைத்தான் கடந்த சில வருடங்களாக, அவரது பாடல்களைக் கேட்டுக்கொண்டே கவலையுடன் தேட வேண்டியிருக்கிறது.

இந்த புகாரோடு அவரைத் தேடினால், 'அப்பாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்' என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அப்பா தனது 50வது ஆண்டில் 1600 படங்களைத் தாண்டி முதல் சிம்பொனி முடித்து அடுத்த சிம்பொனிக்கும் தயாராகிவிட்டார். அவர் குறித்து வியக்க இனி எதுவும் மிச்சமில்லை.

உங்களிடம் அவ்வளவு எதிர்பார்ப்பது நியாயமாகாது. ஆனால் இந்த 29 ஆண்டுகளில் 200 படங்களைக் கூட எட்டாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. எத்தனையோ வருடங்களாக ஒரு நாளில் 6 பாட்டு கொடுத்த வீட்டு வாசலில் 6 மாதங்களுக்கும் மேல் ஒரு பாட்டுச் சத்தம் கேட்க முடியாமல் இருப்பது என்ன கொடுமை சரவணா இது?

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிற துபாய்க்கு பை பை சொல்லிவிட்டு கோடம்பாக்கத்துக்கு வந்துவிடுங்கள் யுவன். உங்கள் பாடல்களை மட்டும் அல்ல. அந்த மயக்கும் குரலையும் கேட்கக் காத்திருக்கிறது ஒரு பெரும் கூட்டம். பழைய பன்னீர்செல்வமாக உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள் இசை ரசிகர்கள்.

யுவனின் டாப் 10 பாடல்கள்
10. முன்பனியா முதல் மழையா - நந்தா
9. என் காதல் சொல்ல நேரமில்லை - பையா
8. பிறை தேடும் நிலவில் - 7ஜி ரெயின்போ காலனி
7. இறகைப் போல… - நான் மகான் அல்ல
6. ஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்
5. தீ பிடிக்க தீ பிடிக்க - அறிந்தும் அறியாமலும்
4. காதல் வளர்த்தேன் - மன்மதன்
3. ஒரு கல் ஒரு கண்ணாடி - சிவா மனசுல சக்தி
2. எங்கேயோ பார்த்த மயக்கம் - யாரடி நீ மோகினி
1. ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-08-04 17:31:56

சரக்கு இருந்தா தானே சப்ளை பண்ண முடியும். அப்பா always busy அவர் வேண்டாம் என்று தூக்கி போட்ட tune ல தான் இவளவு நாள் குப்பை கொட்டி கொண்டு இருந்தார். அப்பா சரக்கு சப்ளை இல்லை பையனுக்கு பையனுக்கு சரக்கே இல்லை னு உலகம் முழுவதும் தெரிந்து இருக்கும்.. சமீப காலத்தில் இவர் ஒரு ஹிட் பாட்டு கொடுத்தார் என்று ஒரு பாட்டை சொல்லுங்க பார்ப்போம். rowdy babyக்கு பிறகு u1 ஒண்ணுமே பெருசா பண்ணல