'அர்ஜூன் ரெட்டி' இயக்குனருடன் திருவிழாவில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்த படம் 'அர்ஜூன் ரெட்டி' இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது பாலிவுட் வரை சென்று முன்னணி இயக்குனராக மாறிவிட்டார். தற்போது பிரபாஸ் நடிப்பில் 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் மிக புகழ்பெற்ற போணாலு என்கிற திருவிழாவின் நிறைவு நாளில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து கலந்துகொண்டனர்.
லால் தர்வாசா பகுதியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இவர்களுடன் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் சென்றார். இந்த அனுபவம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறும்போது, 'அம்மனை தரிசிப்பது இதுவே முதல்முறை. சந்தீப்புடன் வந்ததில் மகிழ்ச்சி. மக்களின் விருப்பங்கள் நிறைவேறவும் எனக்காகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.