உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் விலகல்.. மோகன்லாலுக்கு அவமரியாதையா ? ; நடிகர் ஆயுஷ்மான் குரானா விளக்கம்

இயக்குனர் விலகல்.. மோகன்லாலுக்கு அவமரியாதையா ? ; நடிகர் ஆயுஷ்மான் குரானா விளக்கம்


கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '2018' படத்தை இயக்கியவர் ஜூட் ஆண்டனி ஜோசப். சமீபத்தில் இவரது டைரக்ஷனில் மோகன்லால் மகள் விஸ்மயா அறிமுகமாகி உள்ள 'தொடக்கம்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு முன்னதாக அவருக்கு பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானாவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் மோகன்லாலுக்காகவும் அவர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார்.

ஆனால் அந்த பாலிவுட் நிறுவனம் மோகன்லாலை இரண்டாம் நிலை நடிகர் என்பது போல கருத்துக்களை கூறியதால் அந்த படத்தை இயக்காமல் அதிலிருந்து வெளியேறினார் ஜூட் ஆண்டனி ஜோசப். சமீபத்தில் இந்த தகவலை அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அந்த படத்தில் சம்பந்தப்பட்டிருந்த நடிகர் ஆயுஷ்மான் குரானாவை ஜூட் ஆண்டனி ஜோசப் சமீபத்தில் சந்தித்துள்ளார். அப்போது அந்த சர்ச்சை குறித்து பேசிய ஜூட் ஆண்டனி ஜோசப் துணை நடிகர்கள் என்று கருத்து கூறியது தயாரிப்பு நிறுவனம் தானே தவிர ஆயுஷ்மான் குரானா அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

ஆயுஷ்மான் குரானாவும் இந்த சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “ஜூட் ஆண்டனியின் பணிகளை நான் ரசிக்கிறேன். விரைவில் அவருடன் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். மோகன்லால் சார் ஒரு ஜாம்பவான்.. அவரிடம் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருடன் இணைந்து பணியாற்றும் தகுதியை நான் ஒரு நாள் பெறுவேன் என நம்புகிறேன்” என்று அவர் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !