உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசு பதவி : அர்ச்சனா, வேல்முருகன் நன்றி

அரசு பதவி : அர்ச்சனா, வேல்முருகன் நன்றி

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும், குழுவின் உறுப்பினராக திரைத்துறையை சேர்ந்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி , மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி கூறும்போது, “இந்த நியமனத்தை எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பொறுப்பாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வின் முக்கியமான அடையாளங்களாக விளங்குகின்றன. அவற்றின் சிறப்புக்கு பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன். இறைவனின் அருளாலும், அனைவரின் ஒத்துழைப்பாலும் இந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன் என்றார்.

இதுகுறித்து வேல்முருகன் கூறும்போது, இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல முருகன் அருளால் எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !