பிளாஷ்பேக் : மணிரத்னத்தை தயாரிப்பாளராக்கிய விஜயகாந்த்
கன்னடம் மற்றும் மலையாள படங்களை இயக்கி விட்டு 'பகல் நிலவு' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் மணிரத்னம். அதன்பிறகு இதயகோவில், மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.சுபாஷ் ஒரு பக்கா போலீஸ் ஆக்ஷன் ஸ்டோரியை எழுதி அதனை மணிரத்னத்திடம் காட்டி இந்த கதையை இயக்க போகிறேன் என்றார். அந்த கதையை படித்த மணிரத்னம் இந்த கதை அற்புதமாக இருக்கிறது. இதில் நடிக்க பொருத்தமான நடிகர் விஜயகாந்த். அவரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு வந்தால் தானே அதற்கான திரைக்கதையை எழுதித் தருவோடு, தானே தயாரிப்பதாகவும் கூறினார்.
விஜயகாந்திடம் சென்று கதை சொன்னார் சுபாஷ். அதுவும் திரைக்கதையை மணிரத்னமே எழுதவிருக்கிறார் என்ற உடன் உடனே ஒப்புக் கொண்டார். இப்படி தொடங்கியதுதான் 'சத்ரியன்'.
இந்த படத்தில் விஜயகாந்துடன் பானுபிரியா, ரேவதி, திலகன், வி.கே.ராமசாமி, குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பேசப்பட்டது போன்று காதல் காட்சியும் பேசப்பட்டது. 'மாலையில் யாரோ மனதோடு பேச' என்ற ஸ்வர்ணலதாவின் காலத்தால் அழியாத பாடல் இடம் பெற்றது இந்தப் படத்தில் தான். படம் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. ஆனால் மணிரத்னம் இயக்கிய எந்தப் படத்திலும் விஜயகாந்த் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.