உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜாவும் பாக்யராஜூம் கடவுள் அனுப்பிய குழந்தைகள்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

பாரதிராஜாவும் பாக்யராஜூம் கடவுள் அனுப்பிய குழந்தைகள்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு


சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு 'ராஜகோபுரங்கள்' என்ற தலைப்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று (ஆக.,16) நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பாரதிராஜா மற்றும் பாக்யராஜின் சிலைகளை திறந்து வைத்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: பாக்யராஜின் 50வது ஆண்டு பொன்விழாவில் நான் அளித்த செயினை, அவர் கடைசி வரை அணிந்திருந்ததை பூர்ணிமா சொன்னபோது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பாரதிராஜா ஒருவரிடம் இருக்கும் விஷயங்களை வெளியே கொண்டு வந்து, அதை எப்படி ஒரு படைப்பாக மாற்றுவது என்று யோசிப்பார். பாக்யராஜிடம் கதை சொன்னால், ஒருபுறம் அந்த கதையை உள்வாங்கிக் கொண்டு, மறுபுறம் அந்த கதையை எப்படி வேறுவிதமாக கொண்டு போகலாம் என்று யோசிப்பார். இரண்டையும் ஒரே நேரத்தில் சிந்திக்கக்கூடியவர் பாக்யராஜ். அதனால் தான் அவர் திரைக்கதை மன்னர்.

​கேமராவை கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் பாரதிராஜா. பழைய திரைப்படங்களில் பிரமாண்டமான காட்சிகள் இருக்கும். அதையெல்லாம் மாற்றிய பாரதிராஜா, கிராமங்களில் டெய்லர், பார்பர் போன்ற கதாபாத்திரங்களை வைத்து படத்தை உருவாக்கி வெற்றிபெற்றார். ரஜினிகாந்த் ஹீரோவாகி, முன்பிருந்த பிம்பங்களை உடைத்தார் என்பது இல்லை. பாரதிராஜாதான் அதை உடைத்தார். நினைத்துப் பார்க்க முடியாதவற்றை செய்து காட்டியவர்கள்தான் இந்த இரண்டு ஜாம்பவான்களும். பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

​பாரதிராஜாவும், பாக்யராஜூம் கடவுள் அனுப்பிய குழந்தைகள். தங்களது திறமையாலும், உழைப்பாலும் முன்னேறினார்கள் என்றால் நான் நம்ப மாட்டேன். எத்தனையோ திறமைசாலிகள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை கடவுள்தான் அளிப்பார். ​இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !