உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரமாண்டம், கலர்புல் பாடல்கள் மட்டுமில்லை... சமூக கருத்துகளையும் சொன்ன இயக்குனர் ஷங்கர்

பிரமாண்டம், கலர்புல் பாடல்கள் மட்டுமில்லை... சமூக கருத்துகளையும் சொன்ன இயக்குனர் ஷங்கர்


* தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று (ஆக.,17) 64வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். கும்பகோணத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, டிப்ளமோ படித்த ஷங்கர், ஆரம்பத்தில் நடிகராக வர ஆசைப்பட்டார். சின்ன வயதில் பல நாடகங்களில் நடித்து இருக்கிறார். 9 படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், அவரை விதி இயக்குனர் ஆக்கிவிட்டது.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக, பவித்ரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷங்கர், 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். கடந்த 33 ஆண்டுகளில் ஷங்கர் 15 படங்களை இயக்கியிருக்கிறார். 10 படங்களை தயாரித்து இருக்கிறார். சிவாஜி மீதான பாசத்தில் ஷங்கர் என்ற பெயரை அவருக்கு வைத்திருக்கிறார் அவரின் தாய். அப்போது பல படங்களில் ஷங்கர் என்ற கேரக்டரில் சிவாஜி நடித்து வந்தார்.

* ஷங்கரின் படங்கள் கமர்ஷியல், பிரமாண்ட படங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சமூக கருத்தை, பல விழிப்புணர்வு விஷயங்களை நேரடியாக, மறைமுகமாக காண்பித்தவர் ஷங்கர். உதாரணத்துக்கு ஜென்டில்மேன் படம், கல்வி வியாபாரமாக்கப்படுவதையும், தகுதியான மாணவர்களுக்குப் பணம் இல்லாததால் உயர்கல்வி மறுக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடும் சமூகக் கருத்தை மையமாகக் கொண்டது. அதில் கல்வி தேவைக்காக கருப்பு பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக ஹீரோ அர்ஜூனை காண்பித்தார். குறிப்பாக, அன்றைய மருத்துவக்கல்வி முறைகேட்டை சுட்டிக்காண்பித்தது கதை.

* 'காதலன்' படத்தின் கரு, காதலை கொண்டாடுவது போல தெரிந்தாலும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காகச் செய்யும் அரசியல் சதிகளையும், வன்முறைகளையும் படம் அம்பலப்படுத்தியது. இளைஞர்களின் சக்தியை காண்பித்தது. நாட்டு நடப்புகளைப் பார்த்துக் சும்மா இருக்காமல், தீமைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடும் மாணவர் சக்தி பல சீன்களில் காண்பித்தார் ஷங்கர்.

* 'இந்தியன்' படத்தில் இந்தியன் தாத்தா மூலமாக லஞ்சத்துக்கு எதிராக பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். லஞ்சம் நாட்டின் மிகப்பெரிய சாக்கடை; அதை வேரோடு அழிக்க வேண்டும், சமுதாயம் மாற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் லஞ்சத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். தன் மகனாக இருந்தாலும் லஞ்சம் வாங்குபவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார் ஷங்கர். ஒரு சுதந்திர போராட்ட வீரரின் பார்வையில் அந்த கதையை சொன்னார்.

* 'முதல்வன்' படத்தில் வரும் ஒருநாள் முதல்வர் பணியை, அவர் எடுக்கும் நடவடிக்கையை, சீர்த்திருத்தத்தை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது. இன்றும் அப்படிப்பட்ட ஒரு முதல்வர் வரமாட்டாரா? மாநிலத்தில் மாற்றம் வராதா என்று மக்கள் ஏங்குகிறார்கள். அரசியலுக்கு நல்லவர், இளைஞர்கள் வர வேண்டும். அரசுதுறையில் எந்த பணியும் வேகமாக நடக்க வேண்டும் என்ற கருத்தையும் படம் வலியுறுத்தியது.

* 'எந்திரன்' படத்தில் அறிவியலை இன்னொரு பக்கத்தை கமர்ஷியலாக சொன்னார். அறிவியல் மனிதனின் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதை தவறாகப் பயன்படுத்தினால் பேரழிவு ஏற்படும். இயந்திரத்திற்கு அறிவு கொடுக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைக் கொடுத்தால் அது பொறாமை, கோபம் போன்ற தீய குணங்களைக் கற்றுக்கொண்டு தன் வழியை மாற்றிவிடும், மனிதகுலத்தை அழிக்கும் என்றார். இன்றைய ஏஐ யுகத்தில் கவனிக்கப்பட வேண்டிய கருத்து அது.

* '2.0' பறவைகளுக்காக, பல உயிர்களுக்காக குரல் கொடுத்த கதை. குறிப்பாக, செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்கள் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளைக் கொல்கிறது. பூமியில் மனிதர்களுக்குரிய உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உண்டு. அறிவியல் வளர்ச்சி இயற்கையை அழிக்காமல், அதனுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்.

* 'சிவாஜி' படம் கருப்பு பணத்துக்கு எதிரான கரு. ஏழை எளிய மக்களுக்குத் தரமான கல்வியும் மருத்துவமும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

* 'ஐ' படமானது வெளிப்புற தோற்றமும் கவர்ச்சியும் தற்காலிகமானது. மனசு தான் அழகு. பொறாமை மற்றும் பேராசை கூடாது. மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு, அவர்களைக் கெடுக்க நினைப்பவர்களின் வாழ்க்கை எப்படித் தங்களின் அகங்காரத்தாலேயே அழிகிறது என்பதை விளக்கியது.

* 'அந்நியன்' படம் பற்றி கேட்க வேண்டாம். அந்த அந்நியன் கேரக்டர் மூலமாக தவறு செய்பவர்களுக்குக் கருட புராணத்தின்படி தண்டனை வழங்கும் விதத்தை கொஞ்சம் கோபத்துடன் சொன்னார். லஞ்சம், ஊழல், பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு அந்த படம் பல பாடத்தை சொன்னது.

* 'நண்பன்' படத்தின் மூலம் இன்றைய உயர் கல்வி, பெற்றோர்களின் மனநிலைக்கு சில விஷயங்களை சொன்னார். பெற்றோரின் ஆசைக்காகப் படிப்பதை விட, மாணவர்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதை விட, அறிவை வளர்ப்பதே உண்மையான கல்வி. படிப்பு தவிர கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

* 'கேம் சேஞ்சர்' படம் ஓட்டுக்காகப் பணம் கொடுக்கும் முறையைத் தடுக்க சொன்னது. மக்கள் சிந்தித்துச் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு நேர்மையான தனிமனிதனால் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. மக்கள் சக்தியும் சட்டமும் இணைந்தால் ஊழல்வாதிகளை வீழ்த்தலாம் என்றார்.

* 'இந்தியன் 2' படத்தின் கரு, லஞ்சத்துக்கு எதிராக சமூக வலைதளங்களை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். சட்டப்பூர்வமாகவும் எதிர்க்க வேண்டும் என்றது. சமூகம் மாற வேண்டுமெனில் ஒவ்வொரு தனிநபரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !