உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் நடித்த நாட்டுப்புற பாடகி

பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் நடித்த நாட்டுப்புற பாடகி


தமிழகத்தில் அதிகம் அறியப்பட்ட நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். தனது கணவருடன் இணைந்து மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். அதோடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புறக் கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தவர். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியராக விளங்கியவர்.

மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். ராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய ராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 'சூழ்நிலை பாரதம்' என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'பச்சைக்கோயில்' என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார்.

இவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தபோது அதனை மறுத்து வந்தார். என்றாலும், 1990ல் வெளிவந்த 'புதுப் புது ராகங்கள்' என்ற ஒரே படத்தில் மட்டும் பாடகியாகவே நடித்தார். படத்தின் நாயகி சித்தாராவின் தாயாக நடித்தார். தன் மகள் இசைத்துறையில் பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்று போராடும் ஒரு தாயாக நடித்தார்.

இவர்களுடன் ஆனந்த் பாபு, சரண்ராஜ், நாகேஷ், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்தனர். வி.ஆதவன் இயக்கி இருந்தார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்றாலும் கிராமத்து தாயாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதும் ஏனோ அதனை மறுத்துவிட்டு, தனது இசை பயணத்திற்கே மீண்டும் சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !