மூன்றாவது முறை கர்ப்பமா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரீனா கபூர்
பாலிவுட் தம்பதியான கரீனா கபூர் - சைப் அலிகான் ஆகியோர் சமீபத்தில் தங்களது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார்கள். அப்போது சற்று வெயிட் போட்டிருந்ததால் கரீனா கபூர் மூன்றாவது முறையாகக் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின.
அதையடுத்து சில தினங்களுக்கு முன்பு ஜிம்மில் இருந்து கரீனா கபூர் வெளியே வந்தபோது அவரைப் புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவரது உதவியாளர்கள் அவரை ஊடகங்களின் பார்வையில் இருந்து மறைத்தபடி காருக்குள் அழைத்துச் சென்றனர். ஜிம் உடையில் அவரது வயிறு சற்றுப் பருமனாகத் தெரிந்ததால், அது பேபி பம்ப் என்று கூறி, அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகச் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவின.
இந்த நிலையில், அந்த செய்திக்கு கரீனா கபூர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. சுற்றுப்பயணம் சென்ற இடத்தில் அதிக உணவு சாப்பிட்டதால்தான் அவரது உடல் எடை சற்றே அதிகரித்துள்ளது. மற்றபடி அவர் கர்ப்பமாக இல்லை. எனவே தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
மேலும், கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அவரது ஹேர் ஸ்டைலிஸ்ட் யோஜனா கரீனாவின் வயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு, சிரிக்கும் எமோஜி மற்றும் பிட்சா எமோஜியைச் சேர்த்து, இது வெறும் உணவு வயிறுதான் என்பதை நகைச்சுவையாக உணர்த்தியுள்ளார். மேலும், கரீனா கபூர் - சைப் அலிகான் தம்பதிக்குத் தைமூர், ஜே என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.