"என் தந்தை எனக்கு சர்க்கஸ் வலை போல அரணாக இருப்பார்..." : மம்முட்டி குறித்து துல்கர் சல்மான் பெருமிதம்
மலையாள திரையுலகில் மம்முட்டியின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானாலும், காலப்போக்கில் மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி வரை தனது திறமையான நடிப்பால் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் துல்கர் சல்மான். குறிப்பாக, தெலுங்கில் இவரது படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் இவர் நடித்துள்ள 'ஐ ஆம் கேம்' திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனது தந்தை குறித்து பெருமிதமாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் துல்கர் சல்மான்.
அவர் கூறும்போது, எனது தந்தை என் வாழ்க்கையில் எப்போதும் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதில்லை. 'நீயே சூழ்நிலையை கையாளு.. வெற்றியைப் பெறு.. எல்லாமே உன்னால்தான் நடக்க வேண்டும்' என்று எனக்கு சுதந்திரம் வழங்கியுள்ளார். அதேசமயம் ஏதேனும் தவறு நடந்தாலோ அல்லது சிக்கல் ஏற்பட்டாலோ, எனக்குப் பின்னால் ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கத் தயாராகவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, சர்க்கஸ் கயிற்றில் நடப்பவர்கள் கீழே விழுந்தால் காப்பாற்ற ஒரு பாதுகாப்பு வலை இருக்குமே, அது போலத்தான் என் தந்தை எனக்கு என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான்.