சோஹா அலிகானிடமிருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை - குணால் கெமு
ஹிந்தியில் குணால் கெமு தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் உருவாகி உள்ள ‛வைப்' படம் செப்., 18ல் ரிலீஸாகிறது. பிரீத்தி ஜிந்தா, யஷ்பால் ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்பட புரொமோஷனில் இருந்த குணால் கெமு படம் பற்றி அளித்த பேட்டி...
‛மட்காவ் எக்ஸ்பிரஸ்' படத்திற்கு பிறகு ஏன் இந்த இடைவெளி, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு ஆகியவற்றில் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
உண்மையை சொல்லப்போனால் இது எனக்கு நீண்டகால பயணமாக தோன்றவில்லை. ஒரு படத்தை உருவாக்க காலநேரம் தேவைப்படும். மட்காவ் எக்ஸ்பிரஸ் படத்திற்கு பின் இந்த கதையை எழுதினேன். உடனே படத்தையும் துவங்கிவிட்டேன். இந்த பயணத்தில் சவால்கள் இருந்தன. அதை கவனமுடன் கையாண்டத்தில் அதில் ஏற்பட்ட சிக்கல்கள் எனக்கு பெரிதாக தெரியவில்லை. இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே என் குறிக்கோளாக இருந்தது. ஒவ்வொரு சவாலுக்கும் தீர்வு கண்டு முன்னேறி சென்றேன். படம் உருவான விதத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். இப்போது, நாங்கள் இப்படத்தை உருவாக்கியபோது எவ்வளவு ரசித்தோம், அதேஅளவு ரசிகர்களும் இதைப் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நடிகரை தாண்டி உங்களுக்குள் இருக்கும் இயக்குனர் இவ்வளவு சிறப்பாக வெளிப்படுவார் என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?
'மட்காவ் எக்ஸ்பிரஸ்' படத்தை உருவாக்கும்போதே அதை உணர்ந்தேன். ஒரு நடிகராக நான் விரும்பும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதலில் இப்படத்தின் கதையை எழுதினேன். இப்படத்தைத் தயாரிக்க 'எக்செல் என்டர்டெயின்மென்ட்' முன்வந்தது; அதன் மூலமே இயக்குனராக எனது பயணம் தொடங்கியது. படப்பிடிப்புத் தளத்திலேயே நான் இயக்கத்தை கற்றுக் கொண்டேன். ஆறு வயதிலிருந்தே நடித்து வருகிறேன்; அதனால் தொடர்ந்து விஷயங்களைக் கவனித்து வந்தேன், மக்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பார்த்தேன், ஒரு படம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் முயன்றேன். மகேஷ் பட் உடன் பணியாற்றியபோது, அவரது அலுவலகத்தில் நடைபெற்ற திரைக்கதை விவாதங்கள், பாடல் பதிவு மற்றும் திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உங்கள் மனைவி சோஹா அலிகானுடன் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். இயக்குனராக உங்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏதேனும் உங்களுக்கு இருந்ததா?
இல்லை, அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து அத்தகைய அழுத்தம் எதுவும் எனக்கு வந்ததில்லை. நான் இயக்குநராக மாறிய பிறகும் கூட, எனக்காக ஒரு கதாபாத்திரம் எழுதுங்கள் என்றோ அல்லது உங்கள் படத்தில் என்னை ஏன் நடிக்க வைக்கவில்லை? என்றோ அவர் ஒருபோதும் கேட்டதில்லை. எனவே, எனது பாணியில் பணியாற்றுவதற்கான சுதந்திரம் எனக்கு எப்போதும் இருந்து வருகிறது.
கரீனாவின் 'தாயரா' (Dayara) மற்றும் உங்களின் 'வைப்' (Vibe) ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முதலாவதாக, எனது படத்தைப் பற்றி கரீனா வெளிப்படுத்திய கருத்துகளுக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியும் உண்மையான நன்றியும் கொள்கிறேன். எந்தவொரு தயாரிப்பாளரும் தங்கள் படம் மற்றொரு படத்துடன் ஒரே நாளில் வெளியாக வேண்டும் என்று விரும்புவதில்லை; ஏனெனில் அது வசூலைப் பாதிக்கக்கூடும். கரீனா தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நடிகை. ஒரு நடிகராக பிரித்விராஜையும் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இப்படத்தை மேக்னா குல்சார் இயக்கியுள்ளார். எங்கள் இருவருக்கும் உள்ள மிகப்பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால், எங்கள் படங்கள் முற்றிலும் மாறுபட்ட வகையை சேர்ந்தவை. எனவே, பார்வையாளர்கள் ஏதேனும் ஒரு படத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை; அவர்கள் இரண்டு படங்களையும் பார்க்கலாம்.