1980-90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் அம்பிகா. சிவாஜிகணேசன், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யுடன் பொதுவெளியில் தோன்றுவது குறித்து எழுந்துள்ள கருத்துக்கள் தொடர்பாக, நடிகை திரிஷாவுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
விஜய் மற்றும் திரிஷா ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு குறித்து சில காலமாகவே பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இங்கிலாந்தின் சில்வர் ஸ்டோன் நகரில் நடைபெற்ற அஜித் குமாரின் மிச்செலின் லீ மான்ஸ் கப் பந்தயத்தில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டது மீண்டும் இணையத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இருவரும் ஒரே பகுதியில் இருந்து பந்தயத்தைப் பார்வையிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் அதுகுறித்து நடிகை அம்பிகா கூறுகையில், முதல்வர் விஜய், திரிஷா இருவருக்கும் இடையிலான நட்புக்கு யாரும் வேறு அர்த்தம் கொடுக்கக் கூடாது. அதேவேளையில், ஒரு நெருங்கிய நண்பர் மிக முக்கியமான பொதுப் பதவியில் இருக்கும்போது கூடுதல் கவனத்துடன் திரிஷா இருக்க வேண்டும்.
நான் திரிஷாவின் இடத்தில் இருந்தால், ஒரு நண்பருடன் இணைந்து பொதுவெளியில் தோன்றுவது தேவையில்லாத விமர்சனங்களை உருவாக்கினாலோ அல்லது அந்த நண்பரின் பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தினாலோ, அத்தகைய சூழல்களிலிருந்து விலகி இருக்கவே விரும்புவேன் என்றும் கூறியுள்ள அம்பிகா, இது நட்பை முடித்துக் கொள்வதைக் குறிக்காது என்றும், பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றுவது பிறரால் எவ்வாறு பார்க்கப்படும் என்பதில் விழிப்புடன் இருப்பது மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.