உள்ளூர் செய்திகள்

டாக்சிக்

தயாரிப்பு : கேவிஎன் நிறுவனம்
இயக்கம் : கீதுமோகன்தாஸ்
நடிப்பு : யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஷூமோகுரேஷி, ருக்மினிவசந்த், தாரா
ஒளிப்பதிவு : ராஜீவ்ரவி
இசை : ரவிபஸ்ரூர், விஷால்மிஸ்ரா, தனிஷ்க்
வெளியான தேதி : ஆகஸ்ட் 26, 2026
நேரம் : 3 மணிநேரம் 14 நிமிடம்
ரேட்டிங் : 1.5 / 5

கோவாவில் 1947ல் நடக்கும் வன்முறை கலந்த கேங்ஸ்டர் கதை. அதில் அப்பா, மகன் பாசம், அக்கா, தம்பி பாசம் கலந்து ரத்த விருந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அக்கா நயன்தாராவின் பாசம், தியாகத்தால் வளர்ந்து தாதாவாக மாறி இருக்கும் யஷ், கோவா டான் ஒருவரின் மகளான லாராவை மணக்க இருக்கிறார். அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் கியாரா அத்வானி மீது யஷ் காதல் வயப்பட பிரச்னை தொடங்கிறது. டான் மகள் வேணாம். உனக்கு கியாரா தான் சரியான தேர்வு என அக்காவும் தம்பிக்கு சப்போர்ட் பண்ணுகிறார். சும்மா இருப்பாரா டான், பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது. அக்கா, தம்பிக்கு என்ன நடந்தது. கியாரா அத்வானி கதி என்ன என்பதை ரத்தம், வன்முறை, சண்டை, வெட்டு, குத்து, துப்பாக்கி, வெடிகுண்டு, பழிவாங்கல் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கீது மோகன் தாஸ்.

படத்தில் அம்மா, மகன் பாசம் இருக்கிறது. அக்கா, தம்பி பாசம் இருக்கிறது. அப்பா, மகள் பாசம், அப்பா, மகன் பாசம் இருக்கிறது. காதல் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட கோபம், சண்டை, வெறி அதிகமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் யஷ் நடித்த கேஜிஎப், கேஜிஎப் 2வை விட ஓவர் வயலன்ஸ். பெரும்பாலான சீன்களில் ஏதாவது ஒரு கேரக்டர் சிகரெட் பிடித்து கொண்டே, சரக்கு அடித்து கொண்டே இருக்கிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை கெட்டவார்த்தைகள் சர்வ சாதாரணமாக படத்தில் புழங்குகிறது. 'அந்த' மாதிரி காட்சிகளும் ஆங்காங்கே.

மூன்று மாறுபட்ட கெட் அப்பில் வருகிறார் யஷ். அவர் கோபம் கலந்த முரட்டுதனமான நடிப்பு, உழைப்பு ஓகே. ஆனால் அதுவே ஓவர் டோஸ் ஆகி பார்வையாளர்கள் பிபியை அதிகரிக்க வைக்கிறது. ஓவர் ஹீரோயிசம், பில்டப் பொறுமையை சோதிக்கிறது. முதற்பாதியில் கம்பீரமாக, ஸ்டைல் ஆக வரும் யஷ், இரண்டாவது பாதியில் சற்றே வயதான வேடத்தில் வருகிறார். அந்த கெட் அப் செட் ஆகவில்லை. அதிலும் கடைசி ஒருமணி நேரம் அப்பாடா முடியலை. பெண் இயக்குனர் எடுத்த படமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான, பெண்களை தவறாக காண்பிக்கும் காட்சிகள் அதிகம். யஷ் கேரக்டர் அவர் செய்யும் செயல்கள், வன்முறையால் அவர் மீதான இமேஜ் சரிகிறது. கேஜிஎப் இரண்டு பாகங்களில் சம்பாதித்த நல்ல பெயரை இதில் இழக்கிறார். இதில் அவரே கூடுதல் கதை எழுதி இருக்கிறார். எதுக்கு இவ்வளவு வன்மம் என்பது அவருக்கே வெளிச்சம். கிளைமாக்சில் அவர் கேரக்டர் மன ரீதியாக வேறு மாதிரி மாறுகிறது. அந்த நடிப்பை பார்த்தால் தியேட்டரை விட்டு ஓடுகிற மன நிலை வருகிறது.

அக்காவாக வரும் நயன்தாராவுக்கு உண்மையில் மாறுபட்ட படம். அவர் கேரக்டர் சில இடங்களில் ஹீரோயினை விட வலுவாக இருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். என்ன, தாதா கதை என்பதால் சிகரெட் குடிக்கிறார். சரக்கு அடிக்கிறார். இடைவேளை அதற்கு முந்தைய சீன்களில் அவர் நடிப்பு அருமை. என்ன, இடைவேளைக்குபின் அவர் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியில் ருக்மிணி வசந்த் வருகிறார். அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. யஷ் காதலியாக வரும் கியாரா அத்வானி காட்சிகள் தான் படத்தில் கொஞ்சம் ஆ றுதல். அவர் நடிப்பும் அபாரம். டஜன் டஜன் ஆக வில்லன், அடியாட்கள் வருகிறார்கள், சாகிறார்கள். இதெல்லாம் பல பல படங்களில் பார்த்து புளித்தது. ஹுமா குரேஷி வில்லத்தனம் கச்சிதம்.

ஒரு கூட்டத்தில் அப்பா யஷ், மகன் யஷ் மோதிக் கொள்கிறார்கள். அந்த சீன் எப்படா முடியும் என இருக்கிறது. மகன் யஷ் கேரக்டர், நடிப்பு கதைக்கு செட் ஆகவில்லை. அவர் கத்திக் கொண்டே இருக்கிறார்.

ஆக் ஷன் படம் என்பதால் சீனுக்கு சீன் ரத்தம் தெறிக்கிறது. ஒவ்வொரு கால் மணிநேரத்துக்கு ஒருமுறை சண்டை, வயலன்ஸ். கொத்து கொத்தாக செத்து கொண்டே இருக்கிறார்கள். குறைந்தபட்சம் சில ஆயிரம் பேர் செத்திருப்பார்கள். சில சீன்களில் மட்டும் போலீஸ் வருகிறது.

வன்முறை, சண்டை காட்சிகளைக் கண்களை மூடிக்கொண்டு பார்க்க வேண்டிய நிலை. பல சீன் மனதை காயப்படுத்துகிறது. பலகீன மனது உடையவர்கள், பெண்கள் ரொம்பவே பாதிப்பு அடைவார்கள். பெரும்பாலான சீன்கள் நெகட்டிவ் எண்ணத்தை, வக்கிர எண்ணத்தை அதிகரிக்கிறது.

படத்தோட சில பிளஸ் என்றால் வசனங்கள், சில இடங்களில் அது பக்காவாக செட்டாகி இருக்கிறது. அப்புறம் ராஜீவ் கேமரா வொர்க், அந்த காலகட்ட கலர்புல் கிளப், வீடு, தாதாக்கள் நிறைந்த கோவாவை அழகான காண்பிக்கிறது. செட் வொர்க், சிஜி வொர்க்கில் உழைப்பு தெரிகிறது. சண்டைகாட்சிகளில் அனல் தெறிக்கிறது. கியாரா அத்வானி சம்பந்த காதல் சீன், எமோசன் சீன் படத்துக்கு பிளஸ். பாடல்கள் செட் ஆகவில்லை என்றாலும் ரவி பஸ்ரூர் இசை பிளஸ். ஆனால் பல இடங்கள் ஓவர் சவுண்ட் நெகட்டிவ். முதல் பாதியை கூட ஓரளவு மன்னிக்கலாம். இரண்டாம் பாதி ரொம்பவே டார்ச்சர். வயதான யஷ், அவரின் திருமணம், மகன், முதல் காதலி மகன், அவன் டார்ச்சர், சண்டை என தலைவலி. நீளமான கிளைமாக்ஸ், அதில் வரும் டுவிஸ்ட், மன பாதிப்பு, முடியாத சண்டை எல்லாமே இது யஷ் படமா என கேள்வி எழுப்புகிறது. கதையுடன் கனெக்ட் ஆகவே முடியவில்லை.

இந்த கதையில் கீதுமோகன் தாஸ் என்ன சொல்ல வருகிறார். என்ன எடுத்து இருக்கிறார். அவர் விஷன் என்ன என்பது கடைசிவரை புரியவே இல்லை. அம்மாவை, அப்பாவை, அக்காவை, மகனை, காதலியை தவறாக காண்பிப்பது எந்த மாதிரியான மன நிலை. வன்முறை, சண்டை, பில்டப் சேர்த்து யஷ் காண்பித்து என்ன எடுத்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என நினைத்து பொறுமையை சோதிக்க வைத்து இருக்கிறார். படம் முழுக்க யாராவது செத்து கொண்டே இருக்கிறார்கள் அல்லது சித்ரவதை பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கூடவே ரசிகர்களும் சேர்ந்து... இப்படிப்பட்ட காட்சிகளுடன் மனித உணர்வுகளுடன் மலிவாக விளையாடி சினிமா மொழியை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.

படம் முடிந்தபின் வெளியே வரும்போது காட்டு கத்தல், துப்பாக்கி சண்டை, ரத்தவாடை, வன்முறை, வக்கிரம் இல்லாத நிம்மதியான காற்றை சுவாசிக்கும் போது அப்பாடா நம்ம இருக்கிற உலகம் எவ்வளவு அமைதியானது என்ற உணர்வு வருகிறது. அப்படியானால் மூன்றே கால் மணிநேர அந்த நச்சு எவ்வளவு கொடுமையானது என புரிந்து கொள்ளுங்கள். தலைப்பு போலவே ‛டாக்சிக் கன்டென்ட்' நிறைந்த வக்கிர கதை.

டாக்சிக் - சித்ரவதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (8)

Vijohn, Kuala lumpur
2026-08-28 07:26:13

இந்தியாவில் சென்சார் போர்டு என்று ஒன்று உள்ளதா? இந்தியா ஒரு டெமோகிராடிக் நாடு. அதிகப்படியான சுதந்திரம் நாட்டை நாசமாக்கி விடும். ஒரு டைரக்டர் சைக்கோ ஆக இருந்தால் மொத்த இந்தியாவையும் மன நோயாளி ஆகி விட முடியும். இது நல்லதிற்கு அல்ல.


SULLAN, chennai
2026-08-27 14:41:59

ஆமாம் நானும் சொல்ல நினைத்தேன்.. நம்ம சி எம்முக்கு வேண்டப்பட்டவர் அதனால ஒரு அரை கொடுத்து விட்டார்கள் போல...


இளந்திரயன் வேலந்தாவளம்
2026-08-27 13:04:36

படம் நல்லா இல்லை னு சொல்லீட்டீங்க. so collection குறைவிருக்காது


Anand
2026-08-27 04:01:56

Just Think from a layman perspective. The movie and the production unit acts like a multi level marketing. The strategy remains synonymous with MLM.The whole crew certainly must have watched the premier show and would know the “outcome” of the movie. Why waste the effort through “fake” promotion with public, for public in trying to prove otherwise. At the end of the day, it is the “ruthless” public or so called fans and followers losing focus on what is really the need of the hour than following these so called stars. Pitty them.Dear Fans, Think again !!!!


Natarajan Ramanathan, தேவகோட்டை
2026-08-27 01:50:37

கீது மோஹன்தாஸின் மன வக்கிரங்கள் அப்படியே படத்தில் வருகிறது. கேவலமான படம்.


Suresh, Coimbatore
2026-08-26 20:44:57

1 லு இருந்து 1.5 வந்துருச்சா?


Suresh, Coimbatore
2026-08-26 20:43:11

. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.


நிக்கோல்தாம்சன், chikkanayakanahalli tumkur dt and Bangalore
2026-08-26 18:47:32

ஒட்டுமொத்தத்தில் சொதப்பல் ?