உள்ளூர் செய்திகள்

ஹாய்

தயாரிப்பு : ரவுடி பிக்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், செவன் ஸ்கிரீன்ஸ்
இயக்கம் : விஷ்ணு எடவன்
நடிப்பு : கவின், நயன்தாரா, கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா,
ஒளிப்பதிவு : ராஜேஷ் சுக்லா
இசை : ஜென் மார்ட்டின்
வெளியான தேதி : ஆகஸ்ட் 28, 2026
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

காதல் திருமணம்தான் செய்ய வேண்டும் என நினைத்து சென்னைக்கு வரும் கவினும், திருமண பந்தமே வேண்டாம் என நினைத்து ஊரை விட்டு ஓடி வரும் நயன்தாராவும் நண்பர்கள் ஆகிறார்கள். நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கிறார் கவின், காதலை சொல்லாமல் தவிக்கிறார். அப்போது சூழ்நிலை காரணமாக நயன்தாரா என் காதலி, கர்ப்பமாக இருக்கிறார் என குடும்பத்தினர் இடையே பொய் சொல்கிறார் கவின். திருமணத்தை தவிர்த்து வெளிநாடு போகும் ஆசையில் இருக்கும் நயன்தாராவும் அந்த நாடகத்துக்கு சம்மதிக்கிறார். அப்புறமென்ன, ஊரில் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. கடைசியில் இரண்டு குடும்பத்தினருக்கும் ரகசியம் தெரிந்ததா? தனது காதலை நயன்தாராவிடம் கவின் சொன்னாரா? அவர்களுக்கு திருமணம் நடந்ததா? என்பது விஷ்ணு எடவன் இயக்கிய ஹாய் படத்தின் கதை.

காதல் கதை என்றாலும், கவினுக்கு ஜோடி நயன்தாராவா என பலருக்கும் சந்தேகம் வரலாம். அது செட்டாகுமா என்ற கேள்வி வரலாம். அந்த குறையை அதிகம் தெரியாமல் கலர்புல்லாக, காமெடி கலந்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். காதலி கிடைக்காமல் கவின் தவிக்கும் காட்சிகள் கலகலப்பு. அதேபோல், திருமணத்துக்கு மறுத்து சென்னைக்கு ஓடி வரும் நயன்தாரா, கவினை சந்திப்பது, அப்போது நடக்கும் விஷயங்கள் சுவாரஸ்யம்.
கொங்கு தமிழ் பேசிக்கொண்டு, மறைமுகமாக நயன்தாராவை கவின் காதலிக்கும் இடங்கள் ரசிக்க வைக்கிறது. முதற்பாதியை விட, அடுத்த பாதியில் கவின் நடிப்பு, கேரக்டர் இன்னும் பளீச். நயன்தாராவை கர்ப்பிணி என குடும்பத்தினரை நம்ப வைக்க படாதபாடு படுவது, நயன்தாரா மனதில் இடம் பிடிப்பது ஆகியவை பார்வையாளர்களை கவர வைக்கிறது. கவினின் இயல்பான, குறும்புதனம் கலந்த டயலாக், காமெடி பாடிலாங்குவேஜ் படத்தை கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது.

கொஞ்சம் மெர்சூடாக தெரிந்தாலும், எந்த இடத்திலும் நயன்தாரா மைனஸ் ஆக தெரியவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை அழகான காஸ்ட்யூமில், நச்சென வருகிறார். என்ன, கிராமத்து பெண் வேடத்துக்கு அவர் நடை, உடை பேச்சு பொருந்தவில்லை. அவர் சீனியர் என நினைத்துவிட்டாரோ என்னவோ, அவரிடம் சரியாக இயக்குனர் வேலை வாங்கவில்லை. டயலாக் டெலிவரியிலும் செயற்கைதனம். கவின் காதலை கடைசியில் தெரிந்து அவரை கட்டிபிடிக்கும் இடத்தில் கைதட்டல் வாங்குகிறார். பாடல் காட்சிகளில் மிளிர்கிறார்.

கவின் அப்பாவாக மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ் நடித்து இருக்கிறார். சின்ன, சின்ன டயலாக், நடிப்பில் அப்ளாஸ் வாங்குகிறார். செக், சாக்லெட் சம்பந்தப்பட்ட சீன்களில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது அவர் மறைந்துவிட்டார் என்றே தோன்றவில்லை. ஹீரோயின் அப்பாவாக வரும் பிரபு உருக்கமான நடிப்பை தந்து இருக்கிறார். குடிகாரராக , மனைவியை பிரிந்து தவிப்பவராக, மகள் மீது பாசம் உள்ளவராக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட சில எமோஷனல் சீன்கள் படத்துக்கு பிளஸ். வழக்கமான அம்மாவாக வருகிறார் ராதிகா. ஆதித்யா கதிர், சத்யன், குரேஷி காமெடி சீன்கள் சிரிக்க வைக்கின்றன.

அனிருத் பாடிய ரசகுல்லா, துருவ் விக்ரமின் குடிகார நெஞ்சு, ஜி.வி.பிரகாசின் கண்ணக்குழி பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. இந்த கதைக்கு ஜென் மார்ட்டின் பாடல்கள், இசை டானிக். ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு கலர்புல்.

வழக்கமான காதல் கதை, பல படங்களில் பார்த்த சீன்களாக இருந்தாலும் கவின், நயன்தாரா நடிப்பு, குடும்ப சீன்கள், திருமண சிக்கல் கொண்ட விறுவிறு திரைக்கதை படத்தை ஓரளவு காப்பாற்றி இருக்கிறது. முதற்பாதியை விட, பிற்பாதியில்தான் படம் வேகம் எடுக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை படங்கள் இப்படியே திருமண ஏற்பாடுகள், திருமணம் என குறுகிய வட்டத்திற்குள்ளே சுற்றி வரப்போகுதோ? அதிலிருந்து வெளியே வாங்க இயக்குனர்களே! இதுதான் நடக்கப்போகிறது. இப்படிதான் முடியப்போகிறது என பல சீன்களை நம்மால் எளிதாக யுகித்துவிடலாம். அது படத்தின் மைனஸ்.

நயன்தாரா நடிப்பு ஓகே என்றாலும், பல இடங்களில் செயற்கைதனம் தெரிகிறது. அந்த ஜோடி பொருத்தம் சிலருக்கு செட்டாகாமல் இருக்கலாம். நயன்தாரா நடிக்காமல், வேறு ஹீரோயின் நடித்து இருந்தால் படம் இன்னும் ஹிட்டாகி இருக்கும். என்ன செய்வது, அவர் படத்தின் தயாரிப்பாளரும் ஆச்சே. அவர் தன்னை இளமையாக, அழகாக காண்பிக்க எடுத்த படம் மாதிரி தெரியுது. ஆனாலும் டாக்சிக் படத்தை பார்த்துவிட்டு, ஹாய் பார்த்தால் அப்பாடா இது பரவாயில்லை, அமைதியான, கலர்புல், காதல் படங்களும் கோலிவுட்டில் அவ்வப்போது வந்து நம்மை காப்பாற்றுகின்றன என மனசு ஆறுதல் அடையும்.

ஹாய் - கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் காதல்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !