ஸ்பைடர்-மேன் : பிராண்ட் நியூ டே
தயாரிப்பு : கொலம்பியா பிக்சர்ஸ் , மார்வெல் ஸ்டுடியோஸ் ,சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : டெஸ்டின் டேனியல் கிரெட்டன்
நடிப்பு : டாம் ஹாலண்ட், ஜெண்டயா ,சேடி சிங் ,மார்க் ரபோலோ ,ஜான் பெர்ந்தால், ஜேக்கப் பேட்டலன்
ஒளிப்பதிவு : ப்ரெட் பாவ்லாக்
இசை : மைக்கேல் சியான்சினோ
வெளியான தேதி : ஜூலை 30, 2026
நேரம் : 2 மணிநேரம் 25 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
மார்வெல் கதைகள் என்றாலே பரபரப்பாக, விறுவிறுப்பாக, கமர்ஷியலாக இருக்கும். உலகம் முழுக்க அந்த படங்களுக்கு என ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதிலும் ஸ்பைடர் மேன் கதை என்றால் கேட்கவே வேண்டாம். அந்தவரிசையில் 5 ஆண்டுகளுக்குபின் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் படம் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே.
கடந்த பாகத்தில் ஸ்பைடர் மேன் பற்றிய 'நினைவுகள்' அழிக்கப்பட்டுவிட்டதால், அவனுடைய காதலி, நண்பனுக்கு கூட 'என்ன நடந்தது' என தெரியவில்லை. வழக்கம்போல் பிரச்னைகளில் இருந்து நகரத்தை காக்கும் வேலையை செய்யும் ஸ்பைடர்மேன் ஒரு இடத்தில் காதலியை பார்க்கிறான். கூடவே அவளுடன் புது காதலன். விளைவு ஸ்பைடர் மேன் குணம், ஜீன் அவ்வப்போது ஆக்ரோஷமாகிறது. அது அவனுக்கே ஆபத்தாகிறது. காதலிக்கு, தனது நண்பனுக்கு மட்டுமாவது தான் யார் என்பதை தெரிய வைக்க ஆசைப்படுகிறான். அதேசமயம், காணாமல் போன தனது சகோதரியை தேடி, வி மாக்ஸ் என்ற ரகசியத்தை தேடி, தனக்கு இருக்கும் உளவியல் பவரை பயன்படுத்தி, பலரை வசியம் செய்து நியூயார்க் சிட்டியை ரணகளப்படுத்துகிறார் வில்லி சேடி. அவரை ஸ்படைர்மேன் கட்டுப்படுத்தினாரா? அல்லது அழித்தாரா? காதலி, நண்பனுக்கு பழைய நினைவுகள் வந்ததா? வில்லியின் சகோதரிக்கு என்னாச்சு? விமாக்ஸ் என்பது என்ன? என்ற கோணத்தில் இந்த பாக கதை நகர்கிறது.
பீட்டர் பார்க்கர் என்ற ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் நடிப்பில் அசத்தியிருக்கிறார், கலக்கியிருக்கிறார், மிரட்டியிருக்கிறார் என சொல்லிக்கொண்டே போகலாம். ஸ்பைடர் மேன் உடையில் அவரை பார்க்கும்போதே தியேட்டரில் விசில் பறக்கிறது. அறிமுக ஆக் ஷன் காட்சியில் தறிகட்டு ஓடும் ஒரு கவச வாகனத்தை நிறுத்த பல சாகசங்களை செய்கிறார். ஏகப்பட்ட கார், கட்டிடம் டேமேஜ் ஆகிறது. அது ஏன் அப்படி போனது என கதை தொடங்கிறது. அந்த வாகனத்துக்குபின் இருக்கும் மர்மம் தெரியாமல் எல்லாரும் தவிக்கிறார்கள். அடுத்தடுத்து இப்படிப்பட்ட உளவியல் தாக்குதல், வன்முறையாக மாற அதை செய்வது யார் என அவர் கண்டுபிடிக்க நினைக்கிறார். அதேசமயம், காதலி, தனது புது காதலுடன் சுற்ற, அவரின் விரக்தி, கோபம் உடலில் மாற்றத்தை உண்டாக்க, அவர் செய்யும் விஷயங்கள், மாறும் குணம் புதுசாக இருக்கிறது. இது இந்த பாகத்தின் பிளஸ்.
காதல், நட்பு சம்பந்தப்பட்ட இடங்களிலும் டாம் ஹாலண்ட் நடிப்பு அட்டகாசம். அதிலும் காதலி எம்ஜே ( ஜெண்டயா) சம்பந்தப்பட்ட காட்சிகள் செம பிலீங். அத்தை சம்பந்தப்பட்ட அட்வைஸ் உருக்கம். கடைசியில் இவர்தான் வில்லத்தனம் செய்கிறார்என வில்லியை கண்டறிந்து அவர் டீமுடன் சண்டை, அடுத்து நடக்கும் காட்சிகள் இன்னும் விறுவிறுப்பு, அந்த நிஞ்சா சண்டை இன்னும் ஆக்ரோசமாக இருக்கிறது. ஆக் ஷன் பிரியர்களுக்கு விருந்து. கடைசியில் கொஞ்சம் சென்டிமென்ட் மூலமாக பிரச்னைகளுக்கு தீர்வு காண்வதாக படம் முடிகிறது. இதுவும் புதுசு.
முந்தைய படங்களில் காதல், இவ்வளவு எமோஷன், உளவியல் சீன்கள் இல்லை. இந்த பாகத்தில் ஆக் ஷன், சாகசத்துடன் அதை கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். வில்லி சம்பந்தப்பட்ட சீனிலும் ஒரு அக்கா, தங்கை பாசம் இருக்கிறது. தனது சகோதரி என்ன ஆனது என தேடும் அவளின் கோபம், சில உண்மை புரிந்தவுடன் அவர் ஆடும் ஆட்டம் செம. வில்லியாக வரும் சேடி , ஹீரோயினுக்கு இணையாக, சில சமயம் அதிகமாக மிரட்டி இருக்கிறார்.
ஸ்பைடர்மேன் தவிர, ஹல்க் காட்சிகள், அவருக்கும் ஸ்பைடர்மேனுக்குமான சண்டை விஷூவல் விருந்து, காதலியாக வரும் ஜெண்டயா, நண்பனாக வரும் ஜேக்கப் காட்சிகள், முந்தைய படங்கள் பார்த்தவர்களுக்கு டச்சிங் ஆக இருக்கும். இருவரின் நடிப்பும் சூப்பர். படத்தில் எமோசனும், ஆக் ஷனும், பிரமாண்டமும் கலந்து இருக்கிறது. கிராபிக்ஸ் வொர்க், திரைக்கதையில் குறைவில்லை.
முந்தைய மார்வல் படங்கள், ஸ்பைடர்மேன் படங்கள் பார்த்தவர்களுக்கு முன் கதை தெரிந்தவர்களுக்கு படம் இன்னும் நன்றாக புரியும், ஆர்வம் அதிகமாகும். முதல் தடவை பார்த்தால் பல கேள்விகள் எழும். படத்தில் பல இடங்களில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நாங்க எதிர்பார்த்தது இது அல்ல என ரசிகர்கள் பொங்குகிறார்கள். ஆனாலும், சில நிமிடங்களில் ஒரு திருப்பம், ஒரு பரபரப்பு, ஒரு ஆக் ஷனை கொடுத்து அதை சரி செய்துவிடுகிறார் இயக்குனர்.
பிரெட் பவால்க்கின் நேர்த்தியான ஒளிப்பதிவு, மைக்கேல் கியாசினோ மிரட்டில் இசை, டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கமும், இது உலகளாவிய ரசிகர்களை கவரும் கதை என்பதை சொல்லாமல் சொல்கின்றன. குறிப்பாக ஸ்பைடர்மேன் அந்த உடையில் ஹீரோ வரும் காட்சிகள், வசனங்கள், சாகசங்கள், சண்டைகள், நியூயார்க் வீதிகளில், பிரமாண்ட கட்டடங்களுக்கு இடையில் பறந்து , பறந்து செல்வது, அடிபடுவது நல்ல திரை அனுபவத்தை கொடுக்கும், அந்த விஷூவல் மனதிற்கு கொண்டாட்டமாக, வியப்பாக இருக்கும். இந்த கதையில் உளவியில், உணர்ச்சிபூர்வமான சீன்கள் இருப்பது கூடுதல் பலம்.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஸ்பைடர்மேனின் காதலை, நட்பை, பாசத்தை, சண்டையை ரசித்து கைதட்டலாம். மாஸ் விஷூவல் ட்ரீட்டான இந்த மாதிரியான படங்களை தியேட்டரில் பார்த்தால் மட்டுமே நன்கு ரசிக்க முடியும்.
ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ வே - நமக்கும் பறக்கிற உணர்வு ஏற்படுகிறது