உள்ளூர் செய்திகள்

டிசி

இயக்கம்: அருண் மாதேஸ்வரன்
நடிப்பு : லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா, அவினாஷ்
ஒளிப்பதிவு : முகேஷ் ஜி.
இசை : அனிருத்
வெளியான தேதி : ஆகஸ்ட்7, 2026
நேரம் : 2 மணிநேரம் 22 நிமிடம்
ரேட்டிங்: 2 / 5

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் படம், அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். அவரும் சரி, இவரும் சரி வன்முறை, ரத்தம், வெட்டு, குத்துக்குதானே முக்கியத்துவம் கொடுப்பார்கள், இந்த கூட்டணி இணைந்த படம் எப்படி இருக்குமோ என நீங்க நினைத்தால், ஆம், அப்படிதான் !

தாதா அரசு டீமில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் இணைந்து போலீஸ் துறைக்கு சொந்தமான துப்பாக்கிகளை திருடுகிறார். அதை விற்று பணமாக்குகிறார்கள். அவர்களை தனிப்படை தேடுகிறது. ஒரு லாட்ஜில் தலைமறைவு வாழ்க்கை வாழும்போது, அங்கே பாட்டு பாடும் சஞ்சனா மீது லோகேஷிற்கு ஈர்ப்பு வருகிறது. இன்னொரு லாட்ஜில் பாலியல் தொழில் செய்யும் வாமிகா கபியும் ஒரு கட்டத்தில் லோகேஷ் அணியில் இணைகிறார். போலீஸ் டீம் இவர்களை துரத்த, பதிலுக்கு இவர்கள் திருப்பி அடிக்க, நிறைய இழப்புகள். கடைசியில் யார் ஜெயித்தார்கள். சஞ்சனா, வாமிகா யாருடன் இணைந்தார் லோகேஷ் என்பது டிசி படத்தின் கதை. லோகேஷ் கேரக்டர் பெயர் தேவதாஸ், வாமிகா கேரக்டர் பெயர் சந்திரா. அதன் ஆங்கில முதல் எழுத்தின் சுருக்கமே இந்த தலைப்பு.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இது வழக்கமான படம் அல்ல என தெரிந்துவிடுகிறது. சில லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருவரை கொடூரமாக கொல்கிறார் போலீஸ்காரர். பதிலுக்கு லோகேஷ் டீம் பழிவாங்குகிறது. இடையில் இன்னொரு டீமுடன் சண்டை. இப்படியே மாறி, மாறி படம் முழுக்க சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

குடியும், பழிவாங்கலும், ரத்தமும், வன்முறையும்தான் படத்தின் முக்கியமான விஷயங்கள். அதற்கு தக்கப்படி தாடி, அதிகமான சுருள்முடி, சோகமான முகம், கோபம் என ஓரளவு நடிப்பில் தேறியிருக்கிறார் லோகேஷ். ஆனால் படம் முழுக்க ஒருவித டல்லான நடிப்பை தருகிறார். எந்த இடத்திலும் சிரிக்கவில்லை. ரொமான்ஸ் காண்பிக்கவில்லை. சந்தோஷமாக இருக்கவில்லை. அவர் கண்ணில் வெறி மட்டுமே தெரிகிறது. அப்புறம், குடித்துகொண்டே இருக்கிறார். அல்லது வம்பு இழுத்து யாரையாவது அடித்துக் கொண்டே, வெட்டிக் கொண்டே இருக்கிறார். அவரின் ஆக் ஷன் காட்சிகள் ஓகே. நடிப்பில் இன்னும் பல படிகள் தாண்ட வேண்டும்.

லோகேஷ் நண்பர்களாக, ரவுடிகளாக வருகிறவர்கள் நடிப்பு ஓகே. குறிப்பாக, மொட்டை தலையுடன் வரும் அவினாஷ் கவனிக்க வைக்கிறார். அப்புறம், படம் முழுக்க நிறைய தாதாக்கள், அடியாட்கள், போலீஸ். அனைவரும் அடிக்கடி கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் அல்லது ரத்த வெள்ளத்தில் ஓடுகிறார்கள். குறைந்தபட்சம் நுாற்றுக்கணக்கானர்கள் கதையில் காலி ஆகியிருப்பார்கள்.

சோகமான முகத்துடன் ஓட்டலில் பாடும் கேரக்டர் சஞ்சனாவுக்கு. தம் அடிக்கிற துணிச்சலான பொண்ணு. அவருக்கும், லோகேஷ் கனகராஜ் இடையே காதல் மாதிரி இல்லாவிட்டாலும் ஈர்ப்பு. அவரும் ஒரு சண்டையில் வேறு முடிவுக்கு செல்வதும், அதை பார்த்து லோகேஷ் பொங்குகிற இடங்களும் டச்சிங். கொஞ்ச நேரம் வந்தாலும் சஞ்சனா காட்சிகள் மனிதில் நிற்கிறது. ஆனால் அவர் கேரக்டர் பின்னணியை சரியாக இயக்குனர் சொல்லவில்லை.

ஒரு விடுதியில் பல ஆண்டுகளாக அடைபட்டு கிடக்கும் பாலியல் தொழிலாளியாக வாமிகா கபி வருகிறார். ஆரம்பம் முதல் கடைசிவரை அவரின் கவர்ச்சியான உடல்வாகு, வித்தியாசமான நடிப்பு, அவரின் கோபம், சோகம் எல்லாமே புதுசாக இருக்கிறது. குறிப்பாக, அவரின் லிப்ஸ்டிக், அந்த ஒற்றை ரோஜா சீன்கள், அவரின் டயலாக் எல்லாமே பிரஷ். அவரும் ஒரு கட்டத்தில் துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பிக்க, படம் இன்னும் விறுவிறுப்பாகிறது. அவர் சம்பந்தப்பட்ட லாட்ஜ் சீன்கள் வக்கிரம். சில சமயம் அவரும் சினிமாதனமாக பேசுகிறார், நடக்கிறார்.

ராவான கேங்ஸ்டர் கதை என்பதால் அனிருத் இருந்தும் கலர்புல் பாடல்கள் இல்லை. ஆனால், பின்னணி இசையில் அவர் மிரட்டி இருக்கிறார். ஒவ்வொரு சீனுக்கும் அவர் எனர்ஜியாக கொடுத்திருக்கும் பின்னணியை இசை கேட்கவே மிரட்டலாக இருக்கிறது. அதிலும், ஆக் ஷன் காட்சி ஆரம்பிக்கும்போது, ஆக் ஷன் நடக்கும்போது பொங்கி வழியும் இசை சூப்பர். அதேபோல், முகேஷ் கேமாரா டோன், அவர் வைக்கும் கோணங்கள் படத்துக்கு பிளஸ். வேலுார், ஈரோட்டில் கதை நடக்கிறது. ஆனாலும், அதில் தனித்தன்மை, வட்டார பின்னணி இல்லை. எந்த காலத்தில் கதை நடக்கிறது என்பதிலும் தெளிவில்லை. அதற்கான அடையாளங்கள் காட்டப்படவில்லை.

லோகேஷ் கனகராஜ் அப்பாவாக வருகிற இயக்குனர் கஸ்துாரி ராஜாவுக்கு நல்ல அழுத்தமான கேரக்டர். அதேபோல் லோகேஷ் டீமை துரத்துகிற போலீஸ் அதிகாரி கிரிஷ் தயாளும் நன்றாக நடித்து இருக்கிறார். பெரும்பாலான பகுதியை ஆக் ஷன் பிளாக், சேசிங், வன்முறை ஆக்ரமித்து இருப்பதால் பைட் மாஸ்டருக்கு நிறைய வேலை. அவரும் ரொம்பவே ராவாக, பலமுறை கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு ரத்தவாடையுடன் சண்டைக்காட்சிகளை அமைத்து இருக்கிறார். துப்பாக்கி சண்டை, வெடிகுண்டு உபயோகமும் விறுவிறுப்பு. என்ன, இந்த படத்தில் என்ன கதை. எதை சொல்ல வருகிறார் இயக்குனர். இப்படி போலீசும், ரவுடிகளும் மாறி, மாறி சண்டைபோடுகிறார்களே? உயர் அதிகாரிகள், மற்ற அமைப்பு கிடையாதா என்று கேள்வி அவ்வப்போது எழுகிறது. பல கேரக்டர்கள் பில்டப் ஆக அறிமுகம் ஆனாலும், அவற்றை நிறைவாக முடிக்கவில்லை.

லோகேஷ் கனகராஜ் சினிமா பாணியை ரசிப்பவர்களுக்கு, அருண் மாதேஸ்வரனின் வன்முறை பாதையை விரும்புகிறவர்களுக்கு மட்டும் டிசி பிடிக்கும். மற்றவர்கள் படம் முடிந்து வெளியே வரும்போது நம் முகத்தில் ரத்தம் தெறித்துவிட்டதோ என்ற பயந்துபடி கர்ச்சீப்பால் துடைக்கிற மனநிலை வர வேண்டியது இருக்கும்.

டிசி... அருண் மாதேஸ்வரன், லோகேஷ் இணைந்து கொத்திய ரத்த பரோட்டோ



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

mani
2026-08-08 18:32:53

This in one of a engaging movie that i have watched. ITS NOT a fair review score that Dinamalar team had given..