PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM

'காங்கிரசுக்கு ஓட்டு போட விருப்பம் உள்ளவர்கள் கூட, இவரது பேச்சை கேட்டால் ஓட்டு போட மாட்டார்கள் போலிருக்கிறதே...' என, காங்., வெளிநாட்டு பிரிவு தலைவரான சாம் பிட்ரோடா குறித்து கவலை தெரிவிக்கின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
காங்கிரசில் உள்ள அறிவுஜீவி முத்திரை குத்தப்பட்ட தலைவர்களில், சாம் பிட்ரோடாவும் ஒருவர். இவரது பேச்சுகள், பல நேரங்களில் காங்கிரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளன.
சீக்கிய கலவரம், வாரிசு அரசியல் போன்ற விஷயங்களில் இவர் ஏற்கனவே தெரிவித்த கருத்துகளுக்கு, மற்ற கட்சிகளில் இருந்து மட்டுமல்லாமல், காங்கிரசுக்குள்ளும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆனாலும், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், தொடர்ந்து இவருக்கு அந்த கட்சியில் மரியாதை அளிக்கப்படுகிறது.
சாம் பிட்ரோடா சமீபத்தில் பேசுகையில், 'நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் செல்லும்போது என் தாய் வீட்டிற்கு செல்வதை போலவே உணர்கிறேன்...' என தெரிவித்திருந்தார்.
இதற்கு, பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 'பயங்கரவாத ஆதரவு நாடான பாகிஸ்தானை தாய் வீடு என சொல்வதா...' என, பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து, காங்கிரசுக்குள்ளும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினால், நம் நாட்டில் எப்படி ஓட்டு வாங்க முடியும்...' என புலம்புகின்றனர், காங்., நிர்வாகிகள்.