PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM

'எதிர்க்கட்சி என்பதற்காக எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாமா? ஒரு மூத்த அரசியல் தலைவர், இந்த மாதிரி விஷயத்தில் நியாயமாக பேச வேண்டாமா...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி கவலையுடன் பேசுகின்றனர், பா.ஜ.,வினர்.
சமீபத்தில், மத்திய அரசு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விஷயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தது. கார், இருசக்கர வாகனங்களில் துவங்கி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கான வரியை கணிசமாக குறைத்தது.
மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி சமீபத்தில், 'டிவி'யில் உரையாற்றினார். 'மக்களுக்கான சேமிப்பு திருவிழா துவங் கி விட்டது...' என, பெருமையுடன் கூறினார்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'கடந்த எட்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி,, வாயிலாக மக்களை கசக்கி பிழிந்துவிட்டு, இப்போது சீர்திருத்தம் என்கிறீர்கள். மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்...' என, கடுமையாக விமர்சித்திருந்தார்.
பா.ஜ.,வினரோ, 'ஜி.எஸ்.டி., என்றால் என்ன என்றே தெரியாமல் விஷத்தை கக்கியுள்ளார், கார்கே. முதலில், அதை பற்றி அவர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு நல்லது செய்தால், கார்கேவுக்கு மட்டுமல்ல, அவரது கட்சியினர் யாருக்குமே பிடிக்காது போலிருக்கிறது...' என, ஆவேசப்படுகின்றனர்.