PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: ஆம்ஸ்ட்ராங்
கொலை கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை
குற்றவாளிகள் தானா என்பதை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் மீது சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக
கூறுவது வழக்கம் தான். அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க.,வும் இதே
குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.
அப்ப, எதிர்க்கட்சிகளின்
குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சி கண்டுக்க வேணாம்னு சொல்றாரா... மத்தியில் உள்ள
எதிர்க்கட்சிக்கும் இது பொருந்துமா?
ம.தி.மு.க., முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ பேட்டி: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அவரது கட்சிக்கும் பேரிழப்பு. போலீசும், தமிழக அரசும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் ஒன்று கூடி மதுக்கடை வேண்டாம் என்று சொன்னால், அரசே நினைத்தாலும் திறக்க முடியாது.
தி.மு.க.,வுக்கும், ம.தி.மு.க., வுக்கும் உரசல்கள் இருப்பது உண்மை தான் என்பது போல, மக்களை போராட துாண்டி விடுறாரோ?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: இது, திராவிட மாடல் ஆட்சி என தம்பட்டம் அடிக்கும் தி.மு.க., ஆட்சியில் கஞ்சா அதிகரித்துள்ளது. கள்ளச்சாராய சாவு தொடர்கிறது. குடிக்கும் தண்ணீரில் மனித கழிவு மிதக்கிறது. மாதத்திற்கு 100 கொடூரக் கொலைகள் நடக்கின்றன. இதில், பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் பட்டியல் இனத்தவர் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் வேதனை அளிக்கிறது.
கள்ளச்சாராய சாவு, அரசியல் கொலைகள் என அடுத்தடுத்த பிரச்னைகள், சமூக நீதி பேசும் திராவிட மாடல் ஆட்சிக்கு சவுக்கடியா தான் இருக்கு!
மயிலாடுதுறை காங்., - எம்.பி., சுதா ராமகிருஷ்ணன் பேட்டி: 'ஹிந்துக்கள் பற்றி ராகுல் அவதுாறாக பேசி விட்டார்' என, நடிகை குஷ்பு கூறி வருகிறார். ஹிந்துக்களை பற்றி ராகுல் தவறாக பேசவில்லை. ராகுல் பேசும் போது நானும் லோக்சபாவில் இருந்தேன். 'ஹிந்துக்கள் அன்பானவர்கள். நான் அன்பை விதைத்தேன். அன்பை அறுவடை செய்து வருகிறேன்' என்று தான், அவர் பேசினார். தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது பற்றி, பிச்சை காசு என்றார் குஷ்பு. இதுதான் மக்களை இழிவுபடுத்தும் செயல்.
இதெல்லாம் அவதுாறு பேச்சா... அவதுாறு பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி தான் ஆகச்சிறந்த உதாரணம்