PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM

சி.ஐ.டி.யூ., மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி: தமிழகத்தில் இயக்க
தகுதியற்ற நிலையில், 10,000 அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு
வருகின்றன. இவை படிப்படியாக மாற்றப்படும் என சட்டசபையில் அமைச்சர்
தெரிவித்திருந்தாலும், இயக்குவதால் மக்களுக்கான பாதிப்புகள்
அதிகரித்துள்ளன. ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு, 19 மாதங்களாக உரிய
பணப்பலன்கள் கொடுக்கப்படவில்லை. பென்ஷன் பெறுபவர்களுக்கு ஒன்பது ஆண்டுகளாக
பஞ்சப்படி உயர்வு வழங்கவில்லை.
அதனால தான், போக்குவரத்தே ஸ்தம்பிக்கிற அளவுக்கு தோழர்கள் தினமும் இரண்டு போராட்டம் நடத்துறாங்களா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: கேரளாவில், 'அமீபா' தொற்றுநோய் காரணமாக மூவர் இறந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பராமரிக்கப்படாத நீர் நிலைகள், ஏரி, ஆறு, நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர், கோடை காலத்தில் நீண்ட நாட்கள், அதிக வெப்ப நிலையில் இருக்கும் போது, அதில் குளிப்பவர்களுக்கு, 'அமீபா' உயிரி வழியே தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நீச்சல் குளங்களை சுத்தம் செய்யவும், நீர்நிலைகளில் குளிக்க செல்லும் போது, மூக்கு கிளிப் அணிந்து செல்ல அறிவுறுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
அப்படியே அரசு அறிவுறுத் திட்டாலும், எல்லாரும் அதை வேதவாக்கா எடுத்துட்டு, 'பாலோ' பண்ணுவாங்களா என்ன?
பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: தமிழகம் தொடர்ந்து பலிகளையும், கொலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என புரியவில்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு பாதுகாப்பு இல்லை என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும். இந்த கொலைக்கு போலீசாரும், முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை போலீஸ் கமிஷனரை மாத்திட்டாங்களே... இனி பாருங்க தமிழகமும், அதன் தலைநகரும் அமைதி பூங்காவாகிடும்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'யாரும் கட்டாயப்படுத்தி குடிக்க சொல்லவில்லை. மதுவை மக்கள் புறக்கணித்தால், இயற்கையாகவே மதுவிலக்கு வந்துவிடும்' என, துரை வைகோ கூறியுள்ளார். யாரும் கட்டா யப்படுத்தி சீட்டு ஆடுவதில்லை. யாரும் கட்டாயப்படுத்தி குதிரை ரேஸ் பந்தயம் கட்டுவதில்லை. யாரும் கட்டாயப்படுத்தி விபசாரம் செய்வதில்லை. இவற்றுக்கானதடையை நீக்க சொல்வீர்களா?
மக்கள் அவ்வளவு தெளிவாக இருந்தால், இந்த மாதிரி அரசியல் வாதிகளை தானே முதல்ல புறக்கணிப்பாங்க!