PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

நடிகர் விஷால் பேட்டி: தமிழகத்தில் நடக்கும் படுகொலைகள் கவலையை
ஏற்படுத்துகிறது. அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் சினிமா துறையில் இருந்து
கருத்து வருகிறது. அரசு ஏன் சினிமா விவகாரத்திற்கு வருகிறது. அரசு, தங்கள்
துறையை கவனித்தால் போதும். நான் அரசியல் களத்திற்கு வர வேண்டும் என்று
மக்கள் முடிவு செய்துவிட்டால் வேறு வழியில்லை. அரசியல்வாதிகள்
நடிகர்களாகும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் தவறு இல்லை.
நடிப்பில் அனுபவம் இல்லாதவங்களே அரசியலில் அருமையா நடிக்கிறாங்கன்னா, நடிகர்கள் இன்னும் பட்டைய கிளப்புவாங்க போலிருக்கே!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க நிறுவனர் லியாகத் அலிகான் அறிக்கை: அம்மா உணவகங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமி, 'ஸ்டாலின் முதலை கண்ணீர் வடிக்கிறார்' என, கூறுகிறார். மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில், 19 உணவகங்கள் செயல்படவில்லை என, குறை கூறுகிறார். எதிர்க்கட்சியின் அம்மா உணவகம் திட்டத்தை ரத்து செய்யாமல் சிறப்பாக செயல்படுத்துவதை பாராட்ட பழனிசாமிக்கு ஏன் மனம் வரவில்லை.
தி.மு.க., அரசின் பெருந்தன்மையை பாராட்டுவது சரி... அந்த 19 உணவகங்களை ஏன் மூடுனாங்கன்னு யாருமே பதில் சொல்லலையே ஏன்?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்தி விட்டன. ஆனால், பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் மட்டும் போராட்டம் நடத்த முன் வரவில்லை.
மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்காத காங்கிரசுக்கு இனி தமிழகத்தில் இறங்குமுகம் தான் என்பதை வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி நிரூபித்து காட்டும்.
இதுக்கு மேல இறங்கு முகம்னா, 'காங்கிரஸ்'னு ஒரு கட்சி இருந்ததை எதிர்கால தலைமுறை புத்தகத்தில் தான் படிக்கணும்னு சொல்றீங்களா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நாள்தோறும் வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் படும் துயரம் ஏராளம். தமிழக அரசு, மனிதாபிமானமே இல்லாமல் பஸ்களை குறைத்து மக்களை அவதிக்குள்ளாக்குவது கடும் கண்டத்துக்குரியது.
தேவையில்லாம யாரும் ஊருக்கு போய், வெட்டியாக செலவு செய்ய வேண்டாம்னு நினைக்கிறாங்களோ என்னமோ?