PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: தமிழகம் முழுதும் அரசு
கல்லுாரிகளில், 7,300க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள்
பணிபுரிகின்றனர். மூன்று மாதங்களாக, அவர்களுக்கு முதல் மாத ஊதியமே
வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் முதல் மாத ஊதியத்தை, மூன்று
அல்லது நான்கு மாதங்களுக்கு தாமதப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறது
அரசு. பல்கலை மானிய குழு மாதம், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று
பரிந்துரை செய்துள்ளதை, தி.மு.க., அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
கம்மி சம்பளம், அதையும் இஷ்டப்பட்டப்ப கொடுக்கிற, கவுரவமே இல்லாத இந்த பணிக்கு கவுரவ விரிவுரையாளர்னு பேரு வச்சது யாரு?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில்,பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில், 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 400க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காதஅரசு, அங்கு தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.
திராவிட மாடல் ஆட்சியாளர்களின் சமூக நீதி வரிசையில் இதுவும் ஒன்று... அவ்ளோ தான்!
தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலர் பிரதீப் பேச்சு: நடிகர்விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும். அடுத்து லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய நிலை தான் ஏற்படும். அதற்கு கமல் சிறந்த உதாரணம்.
மக்கள் நீதி மய்யம், 2021 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்து, 2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இணைந்தது.
ஏன், விஜய் அ.தி.மு.க.,வுடனோ, நாம் தமிழர் கட்சியுடனோ கூட்டணி வைக்க மாட்டேன்னு இவர்கிட்ட சொல்லிட்டாரா என்ன?
பா.ம.க., தலைவர் அன்புமணிஅறிக்கை: தமிழக மீனவர்கள்தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன், முதல்வர் ஸ்டாலின் தன் கடமையை முடித்துக் கொள்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேர்ல பார்த்தாலும் ஒண்ணும் நடக்காதுன்னு முதல்வர் நினைச்சுக்கிட்டாரோ, என்னவோ?