PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி பேச்சு: போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வரும் இளைய சமுதாயத்தை பாதுகாக்கும் பொறுப்பில், அரசியலை தாண்டி பெற்றோருக்கு பெரும் பங்கு உண்டு. குழந்தைகளை டீன் ஏஜில் மிக கவனிப்புடன், பாதுகாப்புடன் வளர்க்க வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம்.
உண்மை தான்... ஆனால், குழந்தைகள் விஷயத்தில் பல பெற்றோர் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையா தானே இருக்காங்க!
தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள், உள்நோக்கம் இன்றி உண்மையை பேசினால், மத உணர்வை துாண்டும் பேச்சு என்று கற்பனை வழக்குகளை ஜோடித்து கைது செய்ய காவல்துறை துடிக்கிறது. ஆனால், ஹிந்து கடவுள், மதத்தை கொச்சைப்படுத்தி பேசுவோர் மீதும், மத உணர்வை துாண்டும் வகையில் பல கட்சி தலைவர்கள் பேசிய போதும், திராவிட மாடல் அரசு கைக்கட்டி மவுனமாக ரசித்தது ஏன்?
'மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி' என்ற பழமொழியை கேள்விப்பட்டதில்லையா?
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை போலவே, ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். இரு மாநில கட்சி ஆதரவோடு மைனாரிட்டி அரசு நடத்தி வரும்பிரதமர் தொடர்ந்து மக்களை பிளவுபடுத்தி, பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்தால், மக்கள் தேர்தலில் அதற்குரிய பாடத்தை புகட்டுவர்.
2014 முதல் தொடர்ந்து மூன்று லோக்சபா தேர்தல்கள் நடந்தும் ஆட்சிக்கு வர முடியாதபடி காங்கிரசுக்கு பாடம் புகட்டுறாங்களே... அப்படியா?
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் டாக்டர் ரோஹையா ஷேக் முகம்மது பேட்டி: தற்போது வரை தி.மு.க., கூட்டணியில் எந்த பிளவும் கிடையாது. கூட்டணிக்காக நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக்காட்ட தயாராக இருக்கிறோம். ம.தி.மு.க., சமரசம் செய்து கொள்ளும் கட்சி கிடையாது. ஸ்டெர்லைட் விவகாரத்தில், சின்ன சமரசம் செய்திருந்தால்கூட, எத்தனையோ லட்சம், கோடியை, நாங்கள் பரிமாற்றம் செய்திருக்கலாம்.
மூன்றாண்டு தி.மு.க., ஆட்சிக்கு எதிராக 'மூச்' விடாதவர்கள், இப்ப, 'சமரசம் கிடையாது; தவறை சுட்டிக் காட்டுவோம்'னு சொல்றதோட பின்னணி என்னவா இருக்கும்?