PUBLISHED ON : ஆக 12, 2026 12:00 AM

காங்., தமிழக துணைத் தலைவர் ராம.சுகந்தன் அறிக்கை:
கடந்த 2016ம் ஆண்டில், 'த.மா.கா., தலைவர் வாசன், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வரவேண்டும்' என, அப்போதைய காங்., தமிழக தலைவர் இளங்கோவன் அழைத்தார். அதற்கு, 'நான் காங்கிரஸ் கட்சியை விட்டு வெகுதுாரம் சென்று விட்டேன்' என, வாசன் கூறினார். காங்கிரஸ் கட்சி த.வெ.க.,வுடன் கூட்டணி ஆட்சியில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக, தற்போது வாசன் கூறுகிறார். அரசியல் மாறலாம்; ஆனால், அரசியல் நினைவுகள் மாறக்கூடாது.
வாசன் மீண்டும் காங்., கட்சி பக்கம் வந்துட்டா, தனக்கான மரியாதை போயிடும்னு இவர் பயப்படுறாரோ?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
காவிரியில் தண்ணீர் திறக்காத போதும், நம் விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி, பல இடங்களில் விவசாயம் மேற்கொள்கின்றனர். த.வெ.க., அரசு, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசாக திகழ்கிறது என்பதற்கு, சட்ட சபையில் 110வது விதியின் கீழ் நெல்லுக்கும், கரும்புக்கும் ஆதார விலையுடன் ஊக்கத் தொகையை உயர்த்தி, முதல்வர் விஜய் அறிவித்தது வரவேற்கத்தக்கது. அவருக்கு பாராட்டுகள்; வாழ்த்துகள்.
த.வெ.க., கூட்டணிக்கு இவரும், 'நுால்' விட்டு தான் பார்க்கிறார்... ஆனா, அங்கிருந்து சாதகமா எந்தப் பதிலும் வர மாட்டேங்குதே!
இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் பேச்சு:
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளும், மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும். வழக்கத்தில் இருந்து வரும் மரபுரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற சட்டசபை தீர்மானம் வரவேற்புக்குரியது.
'மாநில பாடலுக்கு தான் முன்னுரிமை'ன்னு மத்திய உள்துறை அமைச்சகம் சொன்ன பிறகும், ஏன் இப்படி அரசியல் நடக்குது? மக்களை மாங்காய் மடையர்கள்னு பார்க்கற மனப்பான்மை இன்னும் விடலையா?
சென்னை மயிலாப்பூர் பகுதி அ.தி.மு.க., செயலர் பதவியில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்துள்ள விஜயபாஸ்கர் பேட்டி:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால், 'தீயசக்தி' என அழைக்கப்பட்ட தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க விரும்பிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் முடிவு மீது அதிருப்தி அடைந்து தான், கட்சியை விட்டு விலகினேன். ஜெயலலிதா ஆட்சியை போல, முதல்வர் விஜய் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. த.வெ.க.,வில் இணைந்ததை பெருமையாகவும், கட்சியை வளர்ப்பதை கடமையாகவும் கருதுகிறே ன்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில், கவுன்சிலர் சீட்டுக்கு இப்பவே அச்சாரம் போடுறீங்களோ?
