/தினம் தினம்/சொல்கிறார்கள்/ சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள்! சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள்!
PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

சென்னை மாநகர சுவர்களை விழிப்புணர்வு ஓவியங்களால் அழகுபடுத்தி வரும், 'கரம் கோர்ப்போம்' அறக்கட்டளை நிறுவனரான, மந்தவெளியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி: அடிப்படையில் நான் ஒரு சிவில் இன்ஜினியர்.
சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. எங்கு பார்த்தாலும் சுவர்களில் சிறுநீர் கழிப்பதும், சுவரொட்டிகள் ஒட்டுவதும், குப்பை கொட்டுவதுமான காட்சிகள் என்னை வெகுவாக பாதித்தது.
மாநகராட்சிக்கு புகார் செய்தேன். அவர்கள் வந்து சுத்தம் செய்து விட்டு சென்றனர். ஆனால், அங்கு சில நாட்களில் மீண்டும் குப்பை கொட்டப்பட்டு, பழைய நிலையே நீடித்தது.
அப்போது என் கணவர் தான், 'அந்த சுவரில் எளிமையான வர்ணம் பூசி ஓவியம் வரைந்தால் பொதுமக்கள் அந்த இடத்தை தவறாக உபயோகிக்க மாட்டார்கள்' என்றார்.
சுவரில் அலைகள் போல் எளிய படம் ஒன்று வரைந்தோம். அதன்பின் நல்ல மாற்றம் தெரிந்தது. மக்கள் அந்த இடத்தை தவறாக உபயோகிப்பது நின்றது.
பின், 'இதை ஏன் நாம் ஓர் இயக்கமாக எடுத்துச் செல்லக் கூடாது' என்று தோன்றியது. அதன் நீட்சிதான், 'கரம் கோர்ப்போம்' அறக்கட்டளை.
என் கணவர் ஓவியக் கலைஞர். இந்த இயக்கம் துவங்குவதற்கும் அவர்தான் காரணகர்த்தா.
எங்கள் வேலைகள் பல இடங்களில் பரவி, எல்லாரும் எங்களை அழைக்க ஆரம்பித்த னர். தன்னார்வம் கொண்ட பலரும் இணைய ஆரம்பித்தனர். எங்கள் , 'வாட்ஸாப்' குழுவில் இன்று, 200 பேர் உள்ளனர்.
பள்ளிகள், கல்லுாரிகள், மாநகராட்சி பூங்காக்கள், நுாலகம் என பல இடங்களில், பல விதங்களில் எங்கள் படைப்புகள் இருக்கும். மகளிர் கல்லுாரிகள் என்றால், பெண் கல்வி, பெண் பாதுகாப்பு சார்ந்த வாசகங்கள் இடம்பெறும்.
எங்கள் ஓவியத்திற் கான செலவுகளை சம்பந்தப்பட்டவர்களே பொருட்களாக வாங்கி தந்து விடுவர்.
ரோட்டரி சங்கங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் நன்கொடை யாளர்களும், மனமுவந்து நிதியுதவி செய்கின்றனர்.
சவால்கள் என்றால், சில உள்ளூர் பிரமுகர்களின் தலையீடுகள் இருக்கும். ஒரு பள்ளி யின் சுற்றுச்சுவரில் வரைய ஆரம்பித் தோம்.
அப்போது, 'நாங்கள் சுவரொட்டி ஒட்டும் இடத்தில் நீங்கள் எப்படி வர்ணம் பூசலாம் ?' என்று, அரசியல் வாதிகள் சிலர் தகராறு செய்தனர். இறுதியில், பள்ளி முதல்வர் பேசி சமாதானம் செய்து வைத்தார்.
இது ஒரு தியானம். சுற்றுச்சூழலை காப்பது குறித்த விழிப்புணர்வையும், பொறுப்பையும் பொதுமக்களுக்கு எங்கள் ஓவியங்கள் அளிக்கின்றன. இதில் பங்குபெறும் தன்னார்வலர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியாகவும் இது அமைகிறது.
தொடர்புக்கு
98840 32182