PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM

பாரம்பரியமாக புழக்கத்தில் இருந்த பொருட்களை மறு உருவாக்கம் செய்து, சமூக வலைதளம் வாயிலாக விற்பனை செய்து வரும், திருப்பூர் மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த 27 வயதாகும் ஹரிதா குரு: என் பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். எட்டாவது படிக்கும்போதே, என்னை கோவையில் உள்ள விடுதியில் சேர்த்து விட்டனர்.
எது செய்தாலும், மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்ற எண்ணம் அப்போதே உருவானது. சென்னையில், எனக்கு பிடித்த பொறியியல் படிப்பில், கட்டடக் கலை பிரிவில் சேர்ந்தேன்.
கல்லுாரி முடித்ததும், புதுச்சேரி ஆரோவில்லில், மண் சார்ந்த இயற்கை கட்டடக் கலை குறித்து ஓராண்டு களப்பயிற்சி செய்தேன். அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்தது.
அந்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ஒரு தெளிவு கிடைத்தது. நானே தனித்துவமான பொருட்களை உருவாக்கலாம் என்று நினைத்து, 'சிற்பி ஹேண்ட்மேட் கலெக்டிவ்' என்ற நிறுவனத்தை துவக்கினேன்.
முதலில் தேக்கு மரத்தில், கிளி மத்து ஒன்றை செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். ஒரே நாளில் பலரும் விசாரித்து, 'ஆர்டர்' கொடுத்தனர்.
அதை வாங்கிய ஒருவர், 'சிறு வயதில் என் பாட்டி வீட்டில் இருந்த மத்தை இது நினைவுபடுத்துது. இதை பார்க்கும்போது ஒரு பொருளாக தெரியவில்லை; ஒரு நினைவாக தெரிகிறது' என்றார்.
எங்கள் தயாரிப்பில், மயில் தோற்றத்தில் இருக்கும், 'மயிலுா அஞ்சறை பெட்டி' அதிகம் விற்பனையாகும் பொருள். அதை அறிமுகப்படுத்திய போது, ஒரே நாளில், 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதேபோல் எங்களின் உப்புக் கூடைக்கு திருமண காலங்களில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.
பிளாஸ்டிக் இல்லாமல், 100 சதவீதம் தற்சார்பு பொருட்களை வைத்தே தயாரிக்கிறோம். ஒரு பொருள் தயாரிக்க, 35 நாட்கள் வரை ஆகும்.
சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிடும் போதே, 90 சதவீத பொருட்கள் விற்பனை ஆகிவிடும். 50 வகையான தனித்துவமான, பாரம்பரிய பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
மர வேலை செய்யும் ஒரு தச்சருடன் இந்த வியாபாரத்தை துவக்கினேன். இன்று, நான்கு தச்சர்கள் உட்பட ஏழு பேர் என் குழுவில் இருக்கின்றனர்.
புளியம்பட்டியில் உள்ள எங்கள் தோட்டத்தில் கிராமப்புற கடை ஒன்றையும் நடத்துகிறேன். எதுவும் வாங்கவில்லை என்றாலும் கூட, என்னென்ன பொருட்கள் இருக்கின்றன; அதன் வரலாறு என்ன என்பதை அறிய பலரும் வருகின்றனர்.
சராசரியாக மாதத்திற்கு, 4 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. என் பெற்றோர், என் சகோதரி மற்றும் கணவரின் குடும்பத்தினர் என அனைவரின் ஒத்துழைப்பும் என் வெற்றிக்கு காரணம்.
தொடர்புக்கு
96298 29986
