/தினம் தினம்/சொல்கிறார்கள்/ சிவப்பு கற்றாழை அதிக லாபம் தரும் செடி! சிவப்பு கற்றாழை அதிக லாபம் தரும் செடி!
சிவப்பு கற்றாழை அதிக லாபம் தரும் செடி!
சிவப்பு கற்றாழை அதிக லாபம் தரும் செடி!
சிவப்பு கற்றாழை அதிக லாபம் தரும் செடி!
PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

அதிக மருத்துவ குணம் கொண்ட, அரிய வகை பயிரான சிவப்பு கற்றாழையை ஊடுபயிராக வளர்த்து வரும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள எம்.ஊத்துக்குளியைச் சேர்ந்த விவசாயி முருகேசன்: விவசாயம் தான் எங்கள் குடும்பத்தின் பிரதான தொழில். எனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் தான் செய்கிறேன். மக்காச்சோளம், பழ மரங்கள், கீரை வகைகள் உள்ளிட்ட பல பயிர்களை சாகுபடி செய்கிறேன்.
பழ மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக ஏதாவது ஒரு அரிய வகை தாவரத்தை பயிர் செய்ய விரும்பினேன். அதற்கான தேடலில் இறங்கிய போது தான், சிவப்பு கற்றாழை குறித்து அறிந்தேன்.
அதை என் தோட்டத்தில் நட்டு வைத்ததில், மிகவும் செழிப்பாக வளர்ந்தது. அந்த செடிகளில் இருந்து நிறைய பக்க கன்றுகள் உருவாகின; கன்றுகளை வேரோடு பிடுங்கி, தோட்டத்தில் ஆங்காங்கே பரவலாக நட்டு வைத்தேன்.
இப்படி தொடர்ச்சியாக பெருக்கம் செய்தபடியே இருந்தேன். தற்போது 6,000க்கும் மேற்பட்ட செடிகள் இருக்கின்றன.
இவை, வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர். வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுத்தால் போதும்; செடிகள் நன்கு செழிப்பாக வளர்ந்து, தரமான பக்க கன்றுகள் உருவாகியபடியே இருக்கும்.
ஒரு கன்று, 100 ரூபாய் வரைக்கும், மாதத்திற்கு, 500 கன்றுகள் வரை விற்பனை செய்கிறேன். இதற்கு, எந்த ஒரு செலவும் கிடையாது. அதனால், முழு வருமானமும் லாபம் தான்.
'நர்சரி' தொழிலில் ஈடுபடக் கூடியவர்கள், இயற்கை விவசாயிகள், பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் மாடித்தோட்டம் அமைத்துள்ளோர் என, பலரும் என்னிடம் சிவப்பு கற்றாழையை வாங்குகின்றனர்.
சிவப்பு கற்றாழை செடியின் மடல்களை, 1 கிலோ, 200 ரூபாய் என விற்பனை செய்கிறேன். கோடைக் காலத்தில் மடல்கள் விற்பனை வாயிலாக, 30,000 ரூபாய் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இது, அதிக மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை பயிர் என்பதால், இதற்கு அதிக விலை கிடைக்கிறது. சிவப்பு கற்றாழை தாய்ச் செடி மற்றும் கன்றுகளுக்கு அதிக விலை கிடைத்தாலும், பரவலான விற்பனை வாய்ப்பு இல்லை. சொந்த தேவைக்கு, குறைந்த எண்ணிக்கையில் இதை வளர்க்கலாம்.
உத்தரவாதமான விற்பனை வாய்ப்புகள் அமைந்தால், இதன் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கலாம்.
தொடர்புக்கு: 90434 98712