PUBLISHED ON : மே 03, 2026

அன்பளிப்பை, 'பில்'லுடன் தரலாமே!
சென்ற மாதம், என் பால்ய நண்பனின் பேரன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். நான் வறுமையில் வாடிய போதெல்லாம், எவ்வளவோ உதவி செய்திருக்கிறான், என் நண்பன். ஆகவே, அவன் பேரன் திருமணத்திற்கு சிறிதளவு தங்கம் பரிசளிக்க விரும்பி, ஒரு பிரபல நகைக்கடையில், 2 கிராம் தங்க நாணயத்தை வாங்கிச் சென்றேன். திருமணம் முடிந்ததும், தங்க நாணயத்தை மணமகனின் கையில் கொடுத்து, வாழ்த்துக்கூறி, கூடவே அதன் கடை, 'பில்'லையும் அவன் கையில் கொடுத்த போது, சிலர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர்.
வழக்கமாக பிறருக்கு புதுதுணிமணிகள், மற்ற பொருட்களை பரிசளிக்கும் போது, 'பில்'லை அகற்றி விட்டு கொடுப்பது தான் வழக்கம். எனவே, நான் கொடுத்த நகை, 'பில்' சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என, நினைத்துக் கொண்டேன்.
திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. நண்பனிடம் பிரியா விடைபெற்று கிளம்பினேன். ஒரு வாரத்திற்கு பின், நண்பனிடம் இருந்து எனக்கு போன் அழைப்பு வந்தது. 'நீ நகை, 'பில்'லை கொடுத்தது நல்லதாகி விட்டது. நீ கொடுத்த நாணயத்தையும் , என்னிடமிருந்த சிறிய நகைகளையும் போட்டு ஒரு பெரிய நகையை வாங்க நினைத்து, அந்த, 'பில்'லில் குறிப்பிட்ட கடைக்கு சென்றிருந்தேன். அந்த, நாணயத்தை பார்த்ததுமே, செய்கூலி, சேதாரமில்லாமல் இன்றைய விலைக்கே எடுத்துக் கொண்டனர். நீ, 'பில்'லையும் கொடுத்ததால் தான் இது சாத்தியமானது...' எனக்கூறி, நன்றி கூறினான், நண்பன்.
ஒருவருக்கு பரிசளிக்கும் பொருட்களுடன், அதன், 'பில்'லையும் கொடுத்தால் இப்படியும் ஒரு நன்மை உண்டு என்பதை உணர்ந்தேன்.
நீங்களும் இப்படி முயற்சிக்கலாமே!
- ந.தேவதாஸ், சென்னை.
ஓய்வுபெற்ற தமிழாசிரியரின் முயற்சி!
எனக்கு தெரிந்த, ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவரை, சமீபத்தில் சந்தித்தேன். வயது முதிர்ந்த நிலையிலும், அவர் மிகவும் உற்சாகமாக செயல்படுவது, என்னை ஆச்சரியப்படுத்தியது.
பொதுவாக, அந்த வயதில், பலர் உடல்நலப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதைக் காணலாம். ஆனால், அவர் தன் வயதையோ, உடல்நலத்தையோ காரணமாகக் கூறி, ஒரு போதும் சோம்பி இருக்கவில்லை.
ஓய்வுபெற்ற பின், கணினி இயக்குவது, அதில் புத்தகங்கள் வடிவமைப்பது போன்றவற்றை, ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்.
இப்போது அவரை அணுகும் எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும், குறைந்த கட்டணத்தில் தட்டச்சு செய்தும், புத்தக வடிவமைப்பு செய்தும் கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், அவர்களின் புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இல்லாதபடி, மிகவும் கவனமாகப் பிழை திருத்தமும் செய்து கொடுக்கிறார்.
இதன்மூலம், வீட்டில் இருந்தபடியே, வருமானம் ஈட்டுவதோடு, தமிழுக்கும் ஒரு வகையில் தொண்டாற்றி வருகிறார்.
அவருடைய இந்த முயற்சி, சம்பாதிக்கவும், சாதிக்கவும் வயது ஒரு தடையல்ல; மன உறுதியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்தால், சாதிப்பது எளிது என்பதை உணர்த்தியது.
- வடிவேல் முருகன், நெல்லை.
அவசியமான சேவை!
சமீபத்தில், ஆதார் நகல் எடுக்க, இ-சேவை மையம் சென்ற போது, கவனித்து வியந்த நிகழ்வு இது:
அந்த கடையில், பெரிய பதாகையில் எந்தெந்த சான்றிதழ் வாங்க, என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்றும், அதில் உள்ள ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், அந்த சான்றிதழ் வாங்க என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாக எழுதப்பட்டிருந்தது; அதற்கான கட்டண விபரமும் இருந்தது.
மேலும், அரசு தரும் நலத்திட்ட உதவிகளை பெற, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அரசின் அனைத்து நல திட்டங்களின் பெயர் மற்றும் அது பற்றிய முழு தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
அந்த தகவல்கள், மக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தன. அக்கடைக்காரரிடம் விசாரித்த போது, 'சான்றிதழ் வாங்க விண்ணப்பிக்க வருவோர், இங்கிருந்தும் தகவலை அறிந்து, சரியான ஆவணங்கள் எடுத்து வரும் போது, வாடிக்கையாளர்களின் வேலை வேகமாக முடிவதோடு, எனக்கும் வேலை சுலபமாக இருக்கும்...' என்றார், கடைக்காரர்.
அவரின் சேவை தொடர, மனதார பாராட்டிவிட்டு வந்தேன்.
- கு.பிருந்தா, ராஜபாளையம்.





