/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் என்னாச்சு? பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் என்னாச்சு?
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் என்னாச்சு?
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் என்னாச்சு?
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் என்னாச்சு?
ADDED : ஜூலை 11, 2024 04:46 AM
பெங்களூரு நகரம் இன்று உலக அளவில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு, இங்குள்ள ஐ.டி., நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பல்வேறு தொழில் வளங்கள் காரணம். பெங்களூரு நகரில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், பல நாடுகளை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். நகரில் மக்கள்தொகை பெருக, பெருக போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்க ஆரம்பித்தது.
பெங்களூரு ரூரல், பெங்களூரை சுற்றியுள்ள துமகூரு, கோலார், ராம்நகர், சிக்கபல்லாபூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெங்களூரு நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில், புறநகர் ரயில் இயக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரினர்.
கடந்த 1963ல் ஹெச்.ஏ.எல்.,லில் பணியாற்றும் ஊழியர்கள் வசதிக்காக, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து விமானபுரா ரயில் நிலையம் வரை, புறநகர் ரயில் இயக்கப்பட்டது.
இதையடுத்து, பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த ஆண்டு 1983.
ஜாபர் ஷெரிப் ஆர்வம்
ரயில்வே அமைச்சராக இருந்த ஜாபர் ஷெரிப், பெங்களூரு எம்.பி.,க்கள், புறநகர் ரயில் திட்டத்தை கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டினர்.
பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் 58 கி.மீ., துாரத்திற்கு 650 கோடி ரூபாய் செலவில், புறநகர் ரயில் வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, உத்தேச ரயில் திட்டம் குறித்து நன்கு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்தது.
அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த ஜாபர் ஷெரிப், மத்திய அரசிடம் புறநகர் ரயில் பணிக்கான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். ஆனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா, புறநகர் ரயில் பணிகளுக்கான அறிக்கையை நிராகரித்தார்.
கடந்த 2007ல், பெங்களூரில் விரிவான போக்குவரத்து திட்டங்களை துவங்க ரயில் இந்திய மற்றும் பொருளாதார சேவைகள் கமிஷனை, கர்நாடக அரசு அமைத்தது.
பிரஜா பெங்களூரு
இந்த கமிஷன் சில ஆய்வுகளை மேற்கொண்டு பெங்களூரில் 204 கி.மீ., துாரத்திற்கு புறநகர் ரயில் திட்ட பணிகளை துவங்க பரிந்துரைத்தது. அதன்பின் 2010ல் 'பிரஜா பெங்களூரு' என்ற அமைப்பு 376 கி.மீ., துாரத்திற்கு, புறநகர் ரயில் திட்டத்தைத் துவங்க அரசுக்கு பரிந்துரைத்தது.
அதன்பின்னர் 2012ல் ரயில் இந்திய மற்றும் பொருளாதார சேவைகள் கமிஷன் 440 கி.மீ., துாரத்திற்கு புறநகர் ரயில் திட்டத்துக்கு பரிந்துரைத்தது.
இந்நிலையில், 2013ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சித்தராமையா, அந்த ஆண்டு பட்ஜெட்டில், புறநகர் ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமென அறிவித்தார். ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவும், புறநகர் ரயில் திட்டப் பணிகளை அமைப்பதில், கர்நாடக அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்று கூறினார்.
இதையடுத்து புறநகர் ரயில் திட்டம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.
நரேந்திர மோடி
கடந்த 2022ல் பிரதமர் நரேந்திர மோடி, புறநகர் ரயில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். நிலம் கையகப்படுத்துதல், ரயில்களை பராமரிக்க பராமரிப்பு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டால், பெங்களூரில் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள், விரைவில் பெங்களூரு நகருக்குள் வர முடியும்.
தொகை எவ்வளவு?
பெங்களூரு புறநகர் திட்ட ரயில் பணிகள் 160.457 கி.மீ., துாரத்திற்கு அமைய உள்ளது. 57 ரயில் நிலையங்கள் வரும். இதற்காக 18,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் என்ன உள்ளது?
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பல ரயில் நிலையங்கள் ஒருங்கிணைந்த வணிகமயங்களாக செயல்படும். மெட்ரோ மற்றும் பிற போக்குவரத்துக்கு மக்கள் எளிதில் மாற முடியும். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் தானியங்கி கட்டண அமைப்பு, நடைமேடைகளில் திரை கதவுகள் இருக்கும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு வேகம்?
புறநகர் திட்ட ரயில் பாதையில் ரயில்களை மணிக்கு 90 கி.மீ., வேகத்திலும், ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் போது 35 கி.மீ., வேகத்திலும் இயக்க அனுமதி வழங்கப்படும். தண்டவாளம் அகலப் பாதையாக வரும்.
வழித்தடங்களுக்கு பெயர்
பெங்களூரு புறநகர் ரயில் திட்ட பணிகள் நான்கு பாதைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பூக்களின் பெயர்களை குறிக்கும் வகையில் 'சம்பிகே', 'மல்லிகே', 'பாரிஜாதா', 'கனகா' என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.