Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 1,000 ஆண்டு பழமையான நம்பி நாராயணா கோவில்

1,000 ஆண்டு பழமையான நம்பி நாராயணா கோவில்

1,000 ஆண்டு பழமையான நம்பி நாராயணா கோவில்

1,000 ஆண்டு பழமையான நம்பி நாராயணா கோவில்

ADDED : அக் 07, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
மாண்டியாவின் பாண்டவபுரா தாலுகா மேலுகோட் அருகே உள்ளது தொண்டனுார் கிராமம். இக்கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான நம்பி நாராயணா பெருமாள் கோவில் உள்ளது. ஹொய்சாளா மன்னர் காலத்தில், சோழர்களின் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

எட்டு அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையில், சமாஷ்ரயண கோலத்தில் நம்பி நாராயணா, ஸ்ரீதேவி, பூதேவி சமதேராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலை கட்டியதில் தத்துவஞானி ராமானுஜருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து கோவில் கட்டப்பட்டு இருக்கும் இடத்திற்கு வந்தபோது, சமண மன்னர் பிட்டிதேவர், ராமானுஜரை வரவேற்றார்.

அந்த நேரத்தில் பிட்டிதேவர் மகளுக்கு பேய் பிடித்து இருந்தது. விஷ்ணுவிடம், ராமானுஜர் பிரார்த்தனை செய்தன் மூலம், மன்னர் மகளுக்கு பிடித்திருந்த பேய் விலகியது. மகிழ்ச்சி அடைந்த மன்னர் பிட்டிதேவர், வைணவ மதத்தை தழுவி தன்னுார், தலக்காடு, கதக், மேலுகோட், பேலுாரில் விஷ்ணு கோவில்களை கட்டினார். தொண்டனுார் கிராமத்தில் உள்ள கோவில் முன் அமர்ந்து, ராமானுஜர் பிரசங்கம் செய்தார்.

கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவிலில் மகா ரங்க மண்டபம், 50 துாண்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. படாலங்கன் 40 எண்கோண துாண்களை கொண்டது. கோவிலுக்கு முன் பலிபீடத்துடன் கூடிய 45 அடி உயர கருட துாண் உள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால் வெளியில் இருந்து பார்க்கும்போது, கோவிலின் உச்சி பகுதியில் துாண் இருப்பது போன்று தோன்றும். கோவிலுக்குள் சென்று பார்க்கும்போது நடுவில் இருப்பது போன்று தோன்றும். கோவில் வளாகத்திற்குள் உள்ள கருடன் குளத்திற்கு முன், சிறிய படிக்கிணறு உள்ளது. மண்டப சுவருக்கு அருகில் ராமானுஜாச்சாரியார் பிரசங்கம் செய்த இடத்தில் பாதம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு அருகில் கோபாலகிருஷ்ணா, யோக நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

இந்த மூன்று கோவில்களிலும் தரிசனம் செய்வதால் மோட்சம் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

பெங்களூரில் இருந்து 148 கி.மீ., மாண்டியாவிலிருந்து 36 கி.மீ., துாரத்திலும் கோவில் அமைந்துள்ளது. தினமும் காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்

. - நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us