Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பயிர்களை காக்கும் கத்தேயம்மன்

பயிர்களை காக்கும் கத்தேயம்மன்

பயிர்களை காக்கும் கத்தேயம்மன்

பயிர்களை காக்கும் கத்தேயம்மன்

ADDED : அக் 07, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
பொதுவாக ஒவ்வொரு கோவிலின் பாதுகாப்புக்காக, பூட்டு போடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், கத்தேயம்மன் கோவிலுக்கு பூட்டு போடுவதில்லை. இங்கு உண்டியலையும் காண முடியாது.

கர்நாடகாவின், அனைத்து மாவட்டங்களிலும் புராதன கோவில்கள் உள்ளன. கோவில்களில் வெவ்வேறு விதமான சம்பிரதாயம், வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. இத்தகைய கோவில்களில், கத்தேயம்மன் கோவிலும் ஒன்றாகும். இதுவும் பக்தர்களை தன் வசம் ஈர்க்கிறது.

சிக்கமகளூரு புறநகரின் தெகூரு கிராமத்தில் கத்தேயம்மன் கோவில் அமைந்துள்ளது. பசுமையான வயல்வெளி, தோட்டங்கள் சூழ்ந்த பகுதியில் இக்கோவில் உள்ளது. சுற்றிலும் வயல்வெளிகள் உள்ளன. இங்கு விளையும் பயிர்களின் காவல் தெய்வமாக விளங்குவதால், இங்கு குடிகொண்டுள்ள அம்மனுக்கு, கத்தேயம்மன் என, பெயர் ஏற்பட்டது. கத்தே என்றால், கன்னடத்தில் வயல் என்று அர்த்தம். இது புராதன கோவிலாகும்.

பயிர்களை மட்டுமின்றி, மக்களையும் காப்பாற்றுகிறார். கோவிலுக்கு வந்து, கத்தேயம்மன் முன்பாக நின்று, மனமுருக வேண்டினால், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களால் நொந்துள்ளவர்கள், திருமணம் தள்ளிப் போனவர்கள், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லாத தம்பதியர், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து பயன் அடைகின்றனர்.

வரங்களை பெற, கடினமான விரதங்களை அனுஷ்டிக்க வேண்டியது இல்லை. துாய்மையான மனதுடன் விளக்கேற்றி வேண்டினாலே போதும். கேட்ட வரங்களை அள்ளித்தருவார் என, பக்தர்கள் கூறுகின்றனர். அம்மனின் சக்தியை அறிந்து, வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

கோவிலுக்கு டிரஸ்டிகள் யாரும் இல்லை. கதவு இருந்தாலும், பூட்டுவது இல்லை. உண்டியலும் இல்லை. தினமும் பூஜை செய்ய அர்ச்சகர் இல்லை. சுற்றுப்பகுதி கிராமங்களின் மக்கள், தினமும் ஒருவர் வீதம், கோவிலுக்கு வந்து சுத்தம் செய்து, பூஜை செய்கின்றனர். கிராமத்தினர் ஆண்டுதோறும் நிதி திரட்டி, திருவிழா நடத்துகின்றனர். இது அமைதியான சூழலில் அமைந்துள்ள கோவிலாகும்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து, 241 கி.மீ., மங்களூரில் இருந்து 148 கி.மீ., மைசூரில் இருந்து 171 கி.மீ., தொலைவில் சிக்கமகளூரு உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. சிக்கமகளூரில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனத்தில், கத்தேயம்மன் கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us