கோல்டு மைன்ஸ் மூடியதுமே அதன் தொழிலாளர் சங்கங்களும் காணாமல் போயிடுச்சு. இப்பவும் பழையபடி கட்சிக்கொரு சங்கம் என 18 சங்கங்கள் இருப்பதாக சொல்லி வர்றாங்க.
நிஜத்தில் ஒரு சங்கமாவது இருக்குதான்னு தேடணும். ஆனாலும் பழைய பல்லவியை பாடிக் கொண்டே பிரச்னைகளை தீர்க்க விடாமல் தடுப்பதாக, நிலுவை தொகை எதிர்ப்பார்க்கிற முன்னாள் தொழிலாளருங்க அங்கலாய்கிறாங்க.
செங்கோட்டைக்காரருக்கு உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லாம சுய நலபோக்கில் செயல்பட்டு குளிர்காயுறாங்க. உண்மையை அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் தேர்தலில், போட்டியை தவிர்க்க இரண்டு பெண் இயக்குனர்களில் ஒருவரை தலைவர் ஆக்க, கை கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் சி.எம்., ஆலோசனை நடத்தினாராம்.
இதுக்காக கோலாரின் 4 அசெம்பிளிக்காரரிடமும் சி.எம்., அரசியல் செயலர், மாவட்ட பொறுப்பு மந்திரி, உணவுத் துறை மந்திரி என பலரிடமும் கலந்து பேசினாராம்.
ஆனாலும் பால் சங்கத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ள குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த பதிலையும் காணோம். இதை யாராவது தோண்டுவாங்களா?
கோல்டு மைனிங் நிறுவனத்துக்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக விபரம் தெரிந்தவங்க சொல்றாங்க. இது பற்றி சென்ட்ரல், ஸ்டேட் என இரண்டு அரசுமே விசாரணை நடத்தல; ஆட்சேபனை தெரிவிக்கல. ஆனால் குடியிருக்கும் வீடுங்க மீது தான் குறியாக இருக்காங்க.
வீடற்றவங்களுக்கு வீடுங்க கட்டித்தர, பல திட்டங்களை அரசுகள் ஏற்படுத்தி இருக்காங்க. இதற்காக பல ஆயிரம் கோடிகளை இரு அரசுகளும் ஒதுக்கி இருக்காங்க.
ஆனாலும் கோல்டு சிட்டியில், ஐந்து தலைமுறையா வாழ்கிறவங்க வீடுகளை, சொந்தம் ஆக்காம காலி செய்யப் போறதா கிலி ஏற்படுத்தி இருக்காங்க. நாட்டில் வீடற்றவங்க யாரும் இருக்க கூடாதென சட்டம் பேசுறாங்க. ஆனால் கோல்டு சிட்டியில 10 ஆயிரம் குடும்பங்களை வீதியில தள்ளுவதாக, அவ்வப்போது பீதியை ஏற்படுத்துறாங்க. பீதியை போக்க, அரசுங்க என்ன செய்ய போகுதோ.