ADDED : ஜூலை 04, 2025 05:22 AM
ஹாசன்: கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் மனைவி இறந்ததாக கணவர் நாடகமாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின், கெளலஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் பிரசன்னா, 35. இவரது மனைவி சாரதா, 32. வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இவர்கள், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் இவர்களுக்குள் கருத்தொற்றுமை இல்லை. தினமும் சண்டை போட்டனர். நேற்று முன்தினம், சாரதா திடீரென இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக, பிரசன்னா கூறினார். இறுதிச்சடங்குகளுக்கும் தயாரானார்.
ஆனால் சாரதாவின் இறப்பில், அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 'மகளை பிரசன்னா அடித்துக் கொன்றுவிட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹளேபீடு போலீஸ் நிலையத்தில் சாரதாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
நேற்று காலை, கிராமத்துக்கு சென்ற போலீசார், சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். பிரசன்னாவிடம் விசாரணை நடத்துகின்றனர்.