Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் குடும்பத்தினரால் நடக்கும் கொலைகள்... அதிகரிப்பு!; 5ல் ஒருவர் மனைவி அல்லது கணவராக இருப்பதாக 'திடுக்'

பெங்களூரில் குடும்பத்தினரால் நடக்கும் கொலைகள்... அதிகரிப்பு!; 5ல் ஒருவர் மனைவி அல்லது கணவராக இருப்பதாக 'திடுக்'

பெங்களூரில் குடும்பத்தினரால் நடக்கும் கொலைகள்... அதிகரிப்பு!; 5ல் ஒருவர் மனைவி அல்லது கணவராக இருப்பதாக 'திடுக்'

பெங்களூரில் குடும்பத்தினரால் நடக்கும் கொலைகள்... அதிகரிப்பு!; 5ல் ஒருவர் மனைவி அல்லது கணவராக இருப்பதாக 'திடுக்'

ADDED : அக் 08, 2025 07:24 AM


Google News
பெங்களூரில் கொலை குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பதே அதிர்ச்சியான விஷயமாகும். இதற்கிடையே குடும்பத்தினரே கொலையாளிகளாக மாறுவது, மேலும் அதிர்ச்சியான தகவல். போலீஸ் துறையின் புள்ளி விபரங்களின்படி, ஐந்து கொலைகள் நடந்தால், அதில் ஒன்று கணவர், மனைவி அல்லது காதலியாக இருக்கின்றனர்.

நடப்பாண்டு ஏப்ரல் 20ம் தேதி, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் வசித்த ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., ஓம் பிரகாஷை, அவரது மனைவி பல்லவியே கொடூரமாக கொலை செய்தார். சமீப ஆண்டுகளில், நகரை உலுக்கிய கொலைகளில், இதுவும் ஒன்றாகும்.

கடந்த 2024, செப்டம்பர் 21ல் வையாலிகாவலில் மஹாலட்சுமி என்ற பெண்ணை, அவரது காதலர் முக்தி ரஞ்சன் பிரதாப் ராய் கொலை செய்தார். உடலை, 59 துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜுக்குள் வைத்திருந்தார். திருமணத்துக்கு மஹாலட்சுமி வலியுறுத்தியதே, கொலைக்கு காரணமாக இருந்தது.

பெங்களூரு மட்டுமின்றி, கர்நாடகாவில், ஆங்காங்கே கள்ளக்காதலுக்காக மனைவியை கொல்வது, கணவரை கொல்லும் சம்பவங்கள் அதிகரிப்பது, கவலை தரும் விஷயமாகும்.

இது குறித்து, பெங்களூரின் கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானோட் கூறியதாவது:

பல்வேறு காரணங்களால், குடும்ப உறவுகள் பாழாகின்றன. இதற்கு முன் கணவன், மனைவி அல்லது காதலர்கள் தங்களின் நேரத்தை அர்த்தமுள்ளதாக கழித்தனர். ஒருவருக்கு ஒருவர் மனம் திறந்து பேசிக்கொண்டனர்.

பிரச்னைகள் இருந்தால், பேசி சரி செய்து கொண்டனர். ஆனால் இன்றைய தம்பதியர், காதலர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும், பேசிக்கொள்வது இல்லை.

இருவரும் தங்களின் மொபைல் போன்களில் பிசியாக உள்ளனர். இவர்களுக்குள் பரஸ்பரம் அன்பு, நம்பிக்கை, புரிதல் இல்லை. தங்களின் தனிப்பட்ட விஷயங்களை தவிர்த்து, மற்ற விஷயங்களில் ஈர்க்கப்படுகின்றனர். குடும்பங்களில் மகிழ்ச்சி குறைந்துள்ளது.

குடும்ப பிரச்னைகளில் சிக்கிய தம்பதியருக்கு, ஆலோசனை கூறி வழி நடத்த போலீஸ் துறையுடன், பல்வேறு தொண்டு அமைப்புகளும் உள்ளன. இங்கு தம்பதியர் ஆலோசனை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வு பெற்ற எஸ்.பி., உமேஷ் கூறியதாவது:

மனக்கசப்பில் உள்ள தம்பதிக்கு, ஆரம்ப கட்டத்திலேயே கவுன்சலிங் அவசியம் உள்ளது. குடும்பத்தில் தம்பதிக்கிடையே பிரிவினை வந்தால், ஏற்படும் பின் விளைவுகள் என்ன என்பதை, அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோரின் சண்டையால், குழந்தைகள் தொந்தரவை அனுபவிக்கின்றனர் என்பதை, விவரிக்க வேண்டும்.

குடும்ப பிரச்னை வழக்குகள், போலீசாரிடம் வந்தால், போலீஸ் அதிகாரிகள், தம்பதிக்கு கவுன்சலிங் கொடுத்து, பிரச்னைகளை சரி செய்வது அவசியம். கணவர், மனைவிக்கு இடையே எந்த விதமான சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்க கூடாது. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

பிரச்னை என்பதால் கணவன், மனைவியையோ அல்லது மனைவி கணவரையோ கொலை செய்து விட்டு, வாழ்க்கை முழுதும் சிறையில் கழிப்பதற்கு பதில், சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை வரும் போது, அவரது வாழ்க்கையில் இருந்து விலகி செல்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த வக்கீல் ஷியாம் சுந்தர் கூறியதாவது:

கள்ளக்காதலுக்காகவே பல கொலைகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படை காரணம், அதீத எதிர்பார்ப்புகள். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால், ஏற்படும் கோபம் கொலைகளுக்கு காரணமாகிறது. தம்பதியர், காதலர்களிடம் சகிப்புத்தன்மை இல்லை. சட்டத்தாலும் கூட, இத்தகைய கொலைகளை தடுக்க முடியாது.

சமூக பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே, கொலைகளை தடுக்க முடியும். கோபம் தலைக்கேறும் போது, சட்ட அறிவு வேலை செய்யாது. எதிர்காலம் நல்ல முறையில் இருக்க வேண்டுமானால், தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் போது, அதிக பொறுப்பு மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முந்தைய தலைமுறைகளில், தம்பதிகளிடம் பழி தீர்க்கும் மனப்போக்கு இருந்தது இல்லை. நமது நாட்டுக்கு வக்கீல்களை விட, மனவியல் வல்லுநர்கள் அதிக அளவில் தேவை. இன்றைக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு, மனநல வல்லுநர்களிடம் ஆலோசனை பெறுவதே தீர்வாக உள்ளது.

மாநிலத்தில் இதுபோன்ற கொலைகள் நடக்க கூடாது என்ற விருப்பம் இருந்தால், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், பணியிடங்களில் மனநல வல்லுநர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us