/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாநில கல்விக்கொள்கை அறிக்கை ஜூன் 2வது வாரத்தில் வெளியீடு மாநில கல்விக்கொள்கை அறிக்கை ஜூன் 2வது வாரத்தில் வெளியீடு
மாநில கல்விக்கொள்கை அறிக்கை ஜூன் 2வது வாரத்தில் வெளியீடு
மாநில கல்விக்கொள்கை அறிக்கை ஜூன் 2வது வாரத்தில் வெளியீடு
மாநில கல்விக்கொள்கை அறிக்கை ஜூன் 2வது வாரத்தில் வெளியீடு
ADDED : ஜூன் 03, 2025 01:59 AM

பெங்களூரு: ''இம்மாதம் இரண்டாவது வாரத்திற்குள் மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை கமிஷன், இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும்,'' என, உயர்நிலை கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்தார்.
முதல்வர் அலுவலக இல்லமான காவேரியில், நேற்று, 'கர்நாடக உயர்கல்வி காலாண்டு இதழை' முதல்வர் சித்தராமையா வெளியிட்டார். அப்போது, அமைச்சர் சுதாகர் பேசியதாவது:
மாநில கல்வி கொள்கையை வரையறை செய்வதற்கு கல்வியாளரும், முன்னாள் யு.ஜி.சி., தலைவருமான பேராசிரியர் சுக்தேவ் தோரட் தலைமையில் 11 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை ஆணையம் அமைக்கப்பட்டது.
இடைக்கால அறிக்கை
இந்த ஆணையம், தன் இடைக்கால அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இதில் உள்ள சில பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, தகவல்களை சேகரிக்க அவகாசம் கேட்டிருந்தனர். எனவே, அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆணையம், தன் பணியை முடித்துள்ளது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்.
நம் தொழில்நுட்ப கல்வியை பலப்படுத்த, ஏ.டி.பி., எனும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 2,600 கோடி ரூபாய் கடன் வாங்க, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள், மேலாண்மை துறையும் ஒப்புக் கொண்டுள்ளது. வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.
வங்கி அதிகாரிகளும், நம் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். விரைவில் கடன் கிடைக்கும். இப்பணத்தின் மூலம், நம் பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு திறன் சார்ந்த கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொழிற்கல்வி
மாநில உயர்கல்வி கவுன்சிலால் வெளியிடப்படும் கர்நாடக உயர்கல்வி காலாண்டு இதழில், வரும் நாட்களில் உயர்கல்வி துறையின் உத்தரவுகள், அறிவுறுத்தல்கள், விதிகள் குறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படும்.
மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கற்றலுடன் சேர்ந்து, தொழில் சார்ந்த வேலை வாய்ப்பு அளிக்க கூடிய திறன் சார்ந்த கல்வி வழங்குவதே இதழை துவங்கியதற்கான நோக்கமாகும். இதில், அரசின் நோக்கம், நிலைப்பாடு குறித்த தகவல்கள் இடம் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.