/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து காலநிலை செயல்திட்ட குழுக்கள் உருவாக்கம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து காலநிலை செயல்திட்ட குழுக்கள் உருவாக்கம்
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து காலநிலை செயல்திட்ட குழுக்கள் உருவாக்கம்
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து காலநிலை செயல்திட்ட குழுக்கள் உருவாக்கம்
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து காலநிலை செயல்திட்ட குழுக்கள் உருவாக்கம்
ADDED : ஜூன் 03, 2025 01:59 AM
பெங்களூரு: ''பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து காலநிலை செயல்திட்ட குழுக்கள் உருவாக்கப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு மண்டபத்தில், காலநிலை செயல் திட்டம் குறித்த நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார், மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ், கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ள உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெங்களூரில் உள்ள பள்ளி மாணவர்களை வைத்து காலநிலை செயல் திட்ட குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில், மாநகராட்சி கட்டுபாட்டிற்குள் உள்ள 6,000 பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். ஒரு குழுவில் 25 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என நியமிக்கப்படுவர்.
சான்றிதழ்
இதன் மூலம் மாணவர்கள், தங்கள் சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிதல், பசுமை ஆற்றல், நீர் பாதுகாப்பு ஆகியவை குறித்து அறிந்து கொள்வர். இவர்கள், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இதில், என்.ஜி.ஓ., அமைப்புகளும் வரும் 6ம் தேதி முதல் சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்வோருக்கு சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்படும். ஏற்கனவே சில பள்ளிகள் கலந்து கொண்டு உள்ளன.
இவர்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரீத்தி கெலோட் நியமிக்கப்பட்டு உள்ளார். துாய்மை பெங்களூரு திட்டத்தின் கீழ் குப்பைகள் உடனடியாக அகற்றப்படும். சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
ரூ.330 கோடி
நடப்பாண்டில் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் உள்ள பூங்காக்களை மேம்படுத்த 80 கோடி ரூபாயும், ஏரிகளின் மேம்பாட்டிற்கு 250 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி, நகரில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னோடி திட்டம் மஹாதேவபுரா, பொம்மனஹள்ளி ஆகிய இடங்களில் நடக்கும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இதன் மூலம் பெங்களூரு பசுமையாக மாறும். ஏற்கனவே, நகரில் உள்ள 6.50 லட்சம் மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல், டீசலில் இயங்கும் மாநகர பஸ்கள் கூடிய விரைவில் எலக்ட்ரிக் பஸ்களாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.