ADDED : செப் 23, 2025 05:07 AM

11 நாட்கள் நடக்கும் மைசூரு தசரா விழா... எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு கவுரவம் அரண்மனை நகரில் குவியும் சுற்றுலா பயணியர்
23_DMR_0002, 23_DMR_0002, 23_DMR_0003, 23_DMR_0004
அரண்மனை நகரமான மைசூரின் தசரா திருவிழாவை, புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர்கள் துாவி துவக்கி வைத்தார். (அடுத்த படம்) அரண்மனையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் நின்ற யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், சல்யூட் அடித்து தனியார் தர்பார் நடத்தினார். (கடைசி படங்கள்) மின்னொளியில் ஜொலித்த சதுக்கம், நகர சாலை.
மைசூரு, செப். 23-
கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் இந்த விழாவை, 'புக்கர்' பரிசு பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர்கள் துாவி துவக்கி வைத்தார். திருவிழாவை முன்னிட்டு உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் அரண்மனை நகரில் குவிந்து வருகின்றனர்.
* ஏற்பாடுகள்
கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில், தசராவும் ஒன்று. மற்ற மாநிலங்களை விட, மைசூரில் விமரிசையாக கொண்டாடப்படும்.
வழக்கமாக, 10 நாட்கள் நடக்கும் தசரா விழா, இந்தாண்டு 11 நாட்கள் நடக்க உள்ளது. இதையடுத்து, அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய, தசரா துணை கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கமிட்டியினர் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தசரா திருவிழா தொடர்பான தகவல்கள் இணையதளம், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டன. இதை பார்த்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டினர் பலர், மைசூரு நகரில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்தனர்.
பிரசித்தி பெற்ற இவ்விழா, மைசூரு சாமுண்டி மலையில் நேற்று துவங்கியது. புக்கர் பரிசு பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், சாமுண்டீஸ்வரி கோவிலில் தேவியை தரிசனம் செய்து, தீபாராதனையை தொட்டு வணங்கினார்.
* குத்துவிளக்கு
அதன்பின், விழா மேடைக்கு வந்த அவர், மேடையில் வெள்ளி தேரில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர்கள் துாவி வணங்கினார். குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவரும், முதல்வர் சித்தராமையாவும் பேசினர். இவ்விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்காக 1,000 இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
திருவிழா துவங்குவதற்கு முன்னரே, நகருக்கு சுற்றுலா பயணியர் வர துவங்கி விட்டனர். இதனால் நகரில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள், லாட்ஜ்கள் நிரம்பி வழிகின்றன. அறைகள் கிடைக்காதவர்கள், புறநகர் பகுதிகள், ரிசார்ட்களில் தங்கி உள்ளனர்.
* சுற்றுலா தலங்கள்
சுற்றுலா தலங்களை பார்க்க விரும்புபவர்கள் டிராவல் ஏஜென்சிகள் மூலம் வாகனங்களை முன்பதிவு செய்துள்ளனர். முதல் நாளான நேற்றே அனைத்து சுற்றுலா தலங்கள், மலர் கண்காட்சி, பொருட்கள் கண்காட்சி, யுவ தசரா, கலாசார நிகழ்ச்சிகள், விவசாய தசரா, பெண்கள் தசரா நடக்கும் பகுதிகளில் சுற்றுலா பயணியர் குவிந்தனர்.
தசரா துவக்க விழாவை முன்னிட்டு, அரண்மனையில் மன்னர் குடும்பத்தினர் சார்பில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டன. வாணிவிலாஸ் அரண்மனையில், மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு, அவரது மனைவி திரிஷிகா குமாரி பாத பூஜை செய்து, தீபாராதனை காண்பித்தார். அதுபோன்று அவரது மகனும் பாத பூஜை செய்தார். தொடர்ந்து, ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் யதுவீர் அமர்ந்து, தனியார் தர்பார் நடத்தினார்.
இரவிலும் நகரம் ஜொலிக்க, சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அரண்மனை, பாரம்பரிய கட்டடங்கள், நகர சதுக்கங்கள், மத்திய வர்த்தக பகுதிகள், நகர சாலைகள் என பல பகுதியிலும், மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
சுற்றுலா பயணியருக்காக, தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும், கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் கூடுதலாக 2,300 பஸ்களையும் இயக்குகின்றன. இதனால், வரும் நாட்களில் சுற்றுலா பயணியர் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நகருக்கு சுற்றுலா பயணியர் சாலை வழியாக வருவதால், நகரை இணைக்கும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் திணறுகின்றன. தசரா பாதுகாப்புக்காக, அண்டை மாவட்டங்களில் இருந்து கே.எஸ்.ஆர்.பி., நகர ஆயுதப்படையினர் என போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் சர்வதேச எஸ்.ஓ.எஸ்., வழிகாட்டுதல்களை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
***