வீடு விற்பனையில் இ.எம்.ஐ., மோசடி விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கூடுதல் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அளித்தது
வீடு விற்பனையில் இ.எம்.ஐ., மோசடி விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கூடுதல் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அளித்தது
வீடு விற்பனையில் இ.எம்.ஐ., மோசடி விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கூடுதல் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அளித்தது
ADDED : செப் 24, 2025 01:24 AM

புதுடில்லி:வீடு வாங்குபவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் கூடுதல் அதிகாரம் அளித்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், வங்கிகளும் கூட்டு சேர்ந்து மும்பை, பெங்களூரு, கொல்கட்டா, மொஹாலி, பிரயாக்ராஜ் போன்ற நகரங்களில் வீடு வாங்குவோரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பான ஆறு புதிய வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன் இதுதொடர்பான குற்றச்சாட்டுகளில் டில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய அனுமதியைத் தொடர்ந்து, சி.பி.ஐ., நாடு முழுதும் விசாரணையை விரிவுபடுத்த உள்ளது.
இந்த வழக்கு மற்றும் விசாரணைக்கான முக்கிய காரணம், 'சப்வென்ஷன் ஸ்கீம்' என்ற பெயரில் நடந்த மோசடிகள் தான். இத்திட்டத்தின் கீழ், வங்கிகள், வீடு கட்டும் நிறுவனத்துக்கு நேரடியாக கடன் வழங்கும். வீடு வாங்குபவர்களுக்கு வீடு ஒப்படைக்கப்படும் வரை, மாதத்தவணையை இந்த நிறுவனம் செலுத்தும்.
ஆனால், பல நிறுவனங்கள் மாதத் தவணையை செலுத்தாமலும், வீடு வாங்குபவர்களுக்கு வீட்டை ஒப்படைக்காமலும் இருந்துள்ளன. இதனால், வீடு வாங்குபவர்கள் வீட்டையும் பெறாமல், மாதத் தவணையை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், 1,200க்கும் அதிகமான வீடு வாங்குபவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த மோசடியில் தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வீட்டு வசதி வாரியங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது. சூப்பர்டெக் என்ற நிறுவனம், இந்த மோசடியில் முக்கியக் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மட்டும் 1998ம் ஆண்டு முதல் 5,157 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை, வீட்டை இழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பதை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.