ADDED : ஜூன் 16, 2024 01:22 AM

நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில் அடுத்தடுத்த இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
நொய்டா 67வது செக்டாரில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்ரு மதியம் 12:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இது, அருகிலுள்ள மருந்து தயாரிக்கும் ஆலைக்கும் பரவியது.
இரண்டு தொழிற்சாலைகளும் கொழுந்து விட்டு எரிந்தன. தகவல் அறிந்து நொய்டா, புலந்த்ஷாஹர், காஜியாபாத் மற்றும் ஹாபூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.
ஆறு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பற்றியவுடன் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
5 கடைகள் நாசம்
தென்மேற்கு டில்லி வசந்த் விஹார் மார்கெட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து சாம்பலாகின. வசந்த் விஹார் சி பிளாக் மார்க்கெட்டில் உள்ள ஒரு கட்டடத்தின் தரைத் தளத்தில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தீப்பறியது. அது, மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் முதல் தளத்துக்கும் பரவியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் 5 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.