ஆந்திராவுக்கு ரூ.60,000 கோடி: மத்திய அரசு தாராளம்
ஆந்திராவுக்கு ரூ.60,000 கோடி: மத்திய அரசு தாராளம்
ஆந்திராவுக்கு ரூ.60,000 கோடி: மத்திய அரசு தாராளம்
UPDATED : ஜூலை 12, 2024 04:42 AM
ADDED : ஜூலை 12, 2024 02:51 AM

புதுடில்லி: சமீபத்தில் ஆந்திர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வரானார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், முக்கிய கூட்டணி கட்சியாகவும் தெலுங்கு தேசம் உள்ளது.
ஆந்திராவின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு. அதில், 60,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் முனையத்தை அமைப்பது முக்கிய கோரிக்கையாகும்.
இது தொடர்பாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான, பி.பி.சி.எல்., எனப்படும் பாரத் பெட்ரோலியம் நிறுவன உயரதிகாரிகளுடனும் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் இந்த முதலீட்டுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் மத்திய பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், மச்சிலிபட்டினம், ராமையபுரம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.